சென்னை:ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்து மறு சீரமைக்கத் தேவையான பரிந்துரைகளை வழங்க உயர்நிலை கண்காணிப்புக் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அந்த அரசாணையில், "2023ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் உயர்நிலை கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சித் தலைவரை குழுவின் தலைவராகவும், கோட்டாட்சியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மண்டல இணை இயக்குநர், அரசு மருத்துவர், அரசு உளவியல் மருத்துவர் உள்ளிட்ட எட்டு பேர் உறுப்பினர்களாகவும், உறுப்பினர் செயலராக மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்" என அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குழு ஒன்றை அமைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் விடுதிகளை ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகள் தாமதமின்றி நிறைவேற்றப்பட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.