பொதுவாகவே தமிழர் உணவு பழக்கவழக்கம் பெரிதும் போற்றப்பட்டவை. இதனால்தான் நம் முன்னோர்கள் நோய்களின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால், தற்போது பிறக்கும் குழந்தைகூட நோயுடன் பிறக்கிறது. இதற்கு நம் உணவு பழக்கத்தில் ஏற்பட்டு வரும் மாற்றமே காரணம்.
இந்நிலையில், இயற்கை உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நேற்று இயற்கை உணவு சந்தை நடத்தப்பட்டது.
இது குறித்து சந்தையின் ஒருங்கிணைப்பாளர் இசைமொழி கூறுகையில், 'சென்னையில் சந்தை' எனும் அமைப்பு, கல்லூரி மாணவர்கள் மற்றும் பெண்களால் உருவாக்கப்பட்டது.
"இந்த அமைப்பு மூலம் மாதத்தின் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் இயற்கை உணவு சந்தை சென்னையில் நடத்தப்படுகிறது. பொதுமக்களின் உடல் நல்வாழ்வுதான் இதற்கு முக்கிய நோக்கம். இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய், சர்க்கரை வியாதி போன்ற நோய்கள் வருவதற்கு உணவு முறைகள்தான் காரணம். நம்முடைய பாரம்பரிய உணவு முறைகளை மறந்ததால், பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ளோம். விவசாயமும், சிறு வணிகர்களின் வாழ்க்கை நலிவடைந்து வருகிறது. அவர்களை மேம்படுத்துவதன் மூலம் தமிழ்நாட்டில் தற்சார்பு நிலையும், பொருளாதார நிலையும் உயரும்.
இதனைக் கருத்தில் கொண்டு ஆரம்பித்தது தான் இந்த சந்தை. இந்த சந்தையில் இயற்கையான முறையில் விளைந்த அரிசிகள், பருப்பு வகைகள், சிறுதானிய வகைகள், நாட்டுப் பழங்கள், நாட்டுக் காய்கறிகள், கீரை வகைகள், செடி வகைகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன. மக்கள் தங்கள் உடல் நலத்தைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றவும் இயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட இயற்கை உணவுகளை வாங்க வேண்டும்", என்றார்.