தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழை இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும்; ஓபிஎஸ் வலியுறுத்தல்

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டினை உயர்த்தி வழங்க ஓபிஎஸ் வலியுறுத்தல்
மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டினை உயர்த்தி வழங்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

By

Published : Nov 14, 2022, 1:18 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை துவங்கியதிலிருந்து பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் அதி கன மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக கடலூர், மயிலாடுதுறை, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகரித்து மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதோடு, பயிர்களும் மூழ்கிப் போய் விவசாயிகளின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது.

கடந்த நவ.3ஆம் தேதி அதி கனமழை பெய்ததன் விளைவாக விவசாய நிலங்களில் தேங்கியிருந்த தண்ணீர் வடிந்து வந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் வரலாறு காணாத அளவுக்கு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ. அளவுக்கு மழை பெய்ததால், ஒரு இலட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பில் பயிரிடப்பட்ட அனைத்து பயிர்களும் தண்ணீரில் மூழ்கிப் போயுள்ளன.

சீர்காழி, கொள்ளிடம், செம்பனார்கோயில், தரங்கம்பாடி உள்ளிட்ட பல இடங்களில் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்படும் என்று வேளாண் துறை அதிகாரிகளே தெரிவிக்கும் அளவுக்கு பயிர்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. இதே நிலைமை தான் கடலூர் மாவட்டத்திலும் நிலவுகிறது.

நெற்பயிரே கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி இருப்பதாகவும், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டும் பாசனக் கால்வாய்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடிக் கொண்டிருப்பதாகவும், பல இடங்களில் வீடுகளிலும், வழிபாட்டு தலங்களிலும் தண்ணீர் புகுந்துள்ளதாகவும், இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக கோயம்புத்தூர் மாவட்டத்திலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மதுரை போன்ற மாவட்டங்களில் உள்ள சாலைகள் மழை நீரில் மூழ்கிப் போயுள்ளதாகவும், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததன் காரணமாக மாணவ, மாணவிகளின் பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்து உடைமைகளும் பறிபோய்விட்டதாகவும், பெரும்பாலான வீடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

சென்னையில் பெரிய அளவுக்கு மழை பெய்யவில்லை என்றாலும், பல பகுதிகள் மழை நீரால் சூழ்ந்திருக்கிறது. ஆலந்தூர், மடிப்பாக்கம், கொளப்பாக்கம், குன்றத்தூர், மாங்காடு, கவுல்பஜார், நன்மங்கலம், புழுதிவாக்கம், மவுலிவாக்கம், திருநின்றவூர், துரைப்பாக்கம், ஆற்காடு ரோடு, கே.கே. நகர் ராஜமன்னார் சாலை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை, ஆவடி அரசு மருத்துவமனை என பல இடங்கள் குளம்போல் காட்சி அளிக்கின்றன.

வேளச்சேரி சுரங்கப்பாதை நீச்சல்குளம் போல் காட்சியளிக்கிறது. ஆங்காங்கே தேங்கியுள்ள நீர் அவ்வப்போது அகற்றப்பட்டால்தான், மேலும் மழைப் பொழிவு ஏற்படும்போது நிலைமை ஓரளவு கட்டுக்குள் இருக்கும். இல்லையெனில் நிலைமை மோசமாகி விடும். இந்த மழைக்கே இந்த நிலைமை என்றால், 2015 ஆம் ஆண்டு போன்று 3 பெருமழை பெய்தால் என்ன கதி ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடையே நிலவுகிறது.

இது தொடர்பாக அரசின் சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும், பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதையும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருப்பதையும், வீடுகளில் தண்ணீர் புகுந்து இருப்பதையும் பத்திரிகைகள் படம் போட்டுக் காண்பிக்கின்றன. தூக்கமின்றி மக்கள் சிரமப்படுவது கண்கூடாகத் தெரிகிறது. பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு தரப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

2020 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை பெய்தபோது, பாதிக்கப்பட்ட நெற் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 75,000 ரூபாய் வழங்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். தற்போது அவரே முதலமைச்சராக வந்துள்ள நிலையில் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாய பெருமக்களிடையே பரவலாக உள்ளது.

இதேபோன்று, இதரப் பயிர்களுக்கான இழப்பீடு, சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கான இழப்பீடு, படுகாயமடைந்தவர்களுக்கான இழப்பீடு, கால்நடைகளுக்கான இழப்பீடு ஆகியவற்றை 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணைப்படி அரசு அளித்து வருவதாகவும், ஏழு ஆண்டுகளில் விலைவாசி ஏற்றம் கடுமையாக அதிகரித்துள்ளதால் தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப இழப்பீடு குறைந்தபட்சம் இரட்டிப்பாக்கப்பட வேண்டுமென்றும் , இதற்கான நடவடிக்கையை திமுக அரசு எடுக்க வேண்டுமென்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடைய நியாயமான எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசிற்கு உண்டு. முதலமைச்சர் இதில் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி, பெரும்பாலான இடங்களில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்றவும், மின்சார இணைப்பு வழங்கப்படாத கிராமங்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கவும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது விடுத்த கோரிக்கைக்கு ஏற்ப நெற் பயிருக்கான இழப்பீட்டினை ஹெக்டேருக்கு 75,000 ரூபாயாக அதிகரிக்கவும், இதர இழப்பீட்டுத் தொகைகளை தற்போதுள்ள விலைவாசிக்கு ஏற்ப குறைந்தபட்சம் இரண்டு மடங்கு உயர்த்தி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் - நிவாரணம் வழங்கிய முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details