கரோனா நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு சில தளர்வுகளுடன் இன்று வரை அமலில் உள்ளது. இதனால் கல்வி கூடங்கள், தொழில் நிறுவனங்கள் முடங்கியுள்ளன. இதனால் பலதரப்பு மக்களும் வேலையை இழந்து பணப்பற்றாக்குறை ஏற்பட்டு சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருந்ததால் சமூக வலைதளங்களில் தங்களது கவனத்தை செலுத்த ஆரம்பித்தனர். குறிப்பாக, பிரபலங்கள் பங்கேற்ற விளம்பரத்தை நம்பி பொழுது போக்கிற்காக வயது வித்தியாசமின்றி செல்போனில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
ஆன்லைன் சூதாட்டம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என நினைத்து பெரும்பாலானோர் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஆன்லைன் ரம்மி விளையாடுவோரின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது. இதனை பயன்படுத்தி மோசடிக்காரர்கள் ஆன்லைன் சூதாட்டத்தில் முதலில் பணத்தை கொடுத்து பொதுமக்களை மூழ்க செய்துவிட்டு பின்னர் சம்பாதித்த பணத்தைவிட பலமடங்கு பணத்தை சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களிடமிருந்து பறித்து கொள்கின்றனர்.
இதில் பெரும்பாலான இளைஞர்கள், கடன் வாங்கிய பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளபடுகின்றனர். இதில் சோகமான விஷயம் என்னவென்றால் ஆன்லைன் சூதாட்டத்தில் காவல் துறை அலுவலர்களும் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 13 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆகையால் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் , பொதுமக்கள் உட்பட பலர் ரம்மி விளையாட்டை தடை செய்யக்கோரி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து, தமிழ்நாடு அரசு ஆன்லைன் விளையாட்டிற்கு தடை விதித்தது. இதுதொடர்பான அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். தடையை மீறி ஆன்லைன் ரம்மி மற்றும் சூதாட்டத்தில் ஈடுபடுவோருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 6 மாத சிறை தண்டனை வழங்கப்படும் எனவும், செல்ஃபோனில் ரம்மி ஆப் வைத்திருப்போருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் சிறை வழங்கப்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காவல் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "அரசு உத்தரவை மீறி ஆன்லைன் ரம்மி விளையாடும் நபர்களை காவல் துறையினர் தொடர்ந்து கண்காணித்துவருகிறோம். ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களின் செல்போன் எண்ணின் ஐபி முகவரியை வைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம். சட்டத்தை மீறி செல்போனில் ஆப் வைத்திருப்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நண்பர்களுடன் சேர்ந்து விளையாடும்போது ஆன்லைன் மூலமாக பணபரிவர்த்தன நடப்பதை கண்காணித்து அந்த நிறுவனங்கள் தடுத்து நிறுத்தவேண்டும். அப்படி இல்லையென்றால் விளையாட்டு நடத்தும் நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்
சைபர் கிரைம் வழக்கறிஞர் கார்த்திகேயன் இதுதொடர்பாக பேசிய சைபர் கிரைம் வழக்கறிஞர் கார்த்திகேயன், " பெரும்பாலான நபர்கள் சமூக வலைதளம் மற்றும் திரை பிரபலங்கள் நடிக்கும் விளம்பரத்தை நம்பி ரம்மி விளையாட்டை பதிவேற்றம் செய்து வந்தனர். ஆனால் தற்போது தடை என்பதால் எதிலுமே விளம்பரம் செய்ய முடியாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தெலங்கானா, கர்நாடகா உட்பட 5 மாநிலங்கள் ரம்மி விளையாட்டை பிளே ஸ்டோரில் இருந்து முழுவதுமாக நீக்கக்கோரி மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன" என்றார்.