சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தேசிய கடல் தொழில்நுட்பக் கழகத்தின் வெள்ளி விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்த நிகழ்வில், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய குடியரசுத் துணைத் தலைவர், "கடல் வளம் இந்தியாவின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. கடல் சார்ந்த தொழில்களால் பொருளாதாரம் மேம்படுவதோடு வேலைவாய்ப்புகளும் உருவாகக்கூடும்.
கடல் வளத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து விரைவில் கடலின் தன்மையை அறியவும், ஆழ்ந்து ஆராய்ச்சி செய்யவும் நிலவுக்குச் சந்திரயான் அனுப்பியதுபோல கடல் ஆராய்ச்சிக்கு 'சமுத்திரயான்' திட்டத்தை செயல்படுத்தவுள்ள தேசிய கடல் தொழில்நுட்பக் கழகத்திற்கு என் வாழ்த்துகள்" என்றார்.
நாம் கிரகத்தில் தண்ணீரைத் தேடுவதோடு நின்றுவிடாமல் நம்மிடம் இருக்கும் கடல் தண்ணீரை முடிந்தவரை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். அதற்கு அதிக அளவு ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்ட வெங்கையா நாயுடு, தற்போது கடல்நீரை குடிநீராக மாற்றும் முறை அதிக பொருட்செலவை ஏற்படுத்துகிறது என்றார். இதனை புதிய ஆராய்ச்சிகள் மூலம் குறைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் வாசிங்க: மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி?