சென்னை:அண்ணா பல்கலைக்கழகம் இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். சென்னையில் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்கிறது. இதன் முதன்மை வளாகம் சென்னையின் கிண்டியிலும், துணைக்கோள் வளாகம் சென்னையின் குரோம்பேட்டையிலும் உள்ளன.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தனியார் நிறுவனங்கள் மூலம் பணியாளர்கள் நியமனம் செய்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும், ஏற்கனவே பணிபுரிந்து வரும் தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னையில் உள்ள 4 வளாகங்களை உள்ளடக்கிய அண்ணா பல்கலைக்கழகத்தில் தினசரி ஊதிய அடிப்படையில் கிட்டத்தட்ட 400 ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் உள்ளனர். அவர்கள், இந்தப் பல்கலைக்கழகத்தில் சில வருடங்கள் முதல் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை பணிபுரிகின்றனர். “கலைஞர் அய்யா திட்டம்” என்ற பெயரில் 10 வருடங்கள் தொடர்ந்து சேவையாற்றி வரும் இவர்களது சேவைகளை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.