சென்னை: 2004ம் ஆண்டு சுனாமி ஏற்பட்ட போது நொச்சிக்குப்பம் பகுதியில் இருந்த மீனவர்களின் குடிசைகள் அனைத்தும் கடுமையாக சேதமடைந்தன. வீடுகளை இழந்த மீனவர்களுக்காக, சுனாமி நிதியில் இருந்து 18,000 குடியிருப்புகள் கட்டித்தருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் துரைப்பாக்கம், கண்ணகி நகர், சோழிங்கநல்லூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தரப்பட்டன.
ஆனால் நொச்சிக்குப்பம் மீனவர்கள் முழுமையாக கடல் தொழிலை நம்பி வாழ்ந்ததால், பிற இடங்களுக்கு செல்லவில்லை. இதைத் தொடர்ந்து சாந்தோம் தேவாலயம் பின்பகுதியில் மீனவர்களுக்காக 2,842 தற்காலிக குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. பின்னர் மீனவர்களுக்காக நொச்சிகுப்பம் பகுதியில் 2013 நிரந்தர வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என அரசு அறிவித்த நிலையில், அந்த எண்ணிக்கை 1,188 ஆக குறைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் அல்லாதோருக்கு அதிகாரிகள் வீடுகளை ஒதுக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய மீனவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜா கூறுகையில், "உலக மக்கள் எங்களுக்கு வழங்கிய சுனாமி நிவாரணம் கிட்டதட்ட ஐந்தாயிரம் கோடி ரூபாய். மீனவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சுனாமி நிதியை பயன்படுத்தி கட்டப்பட்ட 1,960 வீடுகளில் மீனவர்களுக்கு 5 சதவீதம் மட்டும் கொடுத்துவிட்டு, மீதமுள்ள 95 சதவீதம் கூவம் நதிகரையில் இருந்த மக்களுக்கும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கும் ஒதுக்கப்பட்டது .
மேலும் மீனவர்களுக்கு வந்த சுனாமி நிவாரண நிதியை பொது கட்டிடங்கள் கட்டுதல், பாலம் அமைத்தல் போன்ற பணிகளுக்கும் அதிகாரிகள் செலவழித்தனர். ஆனால் மீனவர்களுக்கான சுனாமி நிவாரண நிதியை மீனவர்களுக்கு முழுமையாக செலவிடவில்லை. மீன்வளத்துறை மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு மீனவர் சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் பெற்றவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.