சென்னை: கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பால் சந்தையில் பால் கவர்களை சேகரித்து விற்பனை செய்யும் வேலையை மணி மற்றும் விக்கி என்ற இரு நண்பர்கள் செய்து வந்தனர். கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி மாலை வழக்கம் போல் வேலையை முடித்து விட்டு இருவரும் மது அருந்த சென்றுள்ளார்கள்.
மது அருந்திக்கொண்டிருக்கும் போதே இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மணி, விக்கியின் இடுப்புப்பகுதியில் கைகளால் குத்தி தாக்கியதுடன், கல் ஒன்றை எடுத்து விக்கியின் கால் மீது போட்டுள்ளார். காயமடைந்த விக்கி, கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட விக்கி, மறுநாள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கோவை ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மணியை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த கோவை அமர்வு நீதிமன்றம், மணிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தண்டனையை ரத்து செய்யக்கோரி மணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.