சென்னை:ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா, ஜனவரி 4ஆம் தேதி உயிரிழந்தார். இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல், வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (ஜன.31) தொடங்குகிறது. இதனிடையே திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் பிரதான எதிர்கட்சியான அதிமுகவில் நிலவும் ஒற்றைத்தலைமை விவகாரத்தால், ஈபிஎஸ் - ஓபிஎஸ் இரு தரப்பிலும் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
முன்னேறி செல்கிறதா நாம் தமிழர் கட்சி?
நாம் தமிழர் கட்சி கடந்த 2010, மே 18 அன்று சீமானால் தொடங்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி, எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் 234 தொகுதிகளிலும் தனித்து களம் கண்டது. எனினும், அந்த கட்சியினால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.
அப்போது அக்கட்சியின் வாக்குகள் 1.1 சதவீதமாக இருந்தது. இதனையடுத்து 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, எந்த தொகுதியிலும் வெற்றி பெறாமல் தோல்வியடைந்தது. எனினும் கட்சியின் வாக்கு வங்கி கணிசமாக உயர்ந்து 3.9 சதவீதத்தை பெற்றது.
கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘வரும் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி வைக்காது’ என்பதை அடிக்கடி பேசி வந்தார். அடுத்ததாக நடந்து முடிந்த 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி, சுமார் 7 சதவீத வாக்குகளை பெற்று தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகளுக்கு அடுத்த படியாக 3ஆவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.
கடந்த கால தேர்தல்களை ஒப்பிடுகையில் நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாவிட்டாலும், கணிசமான வாக்கு வங்கிகளை பெற்றிருந்தது. இது மற்ற கட்சிகளுக்கு குறிப்பாக திமுக, அதிமுக கட்சிகளுக்கு பெரிய சவாலாகவே இருந்தது.
வாக்கு வங்கியை பிரிக்கிறதா நாதக?
கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக 1 சதவீத வாக்கு வங்கியில் தோற்ற நிலையில், அதிமுக நூலிழையில் வென்று ஆட்சியை பிடித்தது. இதற்கு காரணம் நாம் தமிழர் கட்சியாக இருந்திருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதினர். அதேபோல் 2021 சட்டப்பேரவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி 3ஆவது கட்சியாக உருவெடுத்ததால், இது திமுக - அதிமுக கட்சிகளின் வாக்குகளை தங்களது பக்கம் மாற்றியிருக்கலாம் என்கின்றனர்.