சென்னை:நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை ‘முத்துநகர் படுகொலை’ என்னும் பெயரில் ஆவணப்படமாக இயக்கப்பட்டுள்ளது. இதனை மெரினா புரட்சி ஆவணப்படத்தை இயக்கிய எம்.எஸ்.ராஜ் இயக்கியுள்ளார். இந்த ஆணவப்படத்தின், ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், வி.சி.க. தலைவர் தொல் திருமாவளவன், திரைக்கலைஞர் ராஜ்மோகன் ஆகியோர் கலந்துகொண்டு ட்ரெய்லரை வெளியிட்டனர். அப்போது பேசிய இயக்குநர் எம்.எஸ்.ராஜ் பேசும்போது. “இது ஒரு புலனாய்வு ஆவண திரைப்படம். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை மட்டுமே சொல்லியிருக்கிறோம்.
தொழில் வளர்ச்சி என்கிற பெயரில் மக்கள் மீது செலுத்தப்படும் அடக்குமுறையை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இந்த படத்தை எடுக்கிறோம் என்கிற செய்தி தெரிந்த இரண்டாவது நாளே ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில், என் மீது புகார் அளிக்கப்பட்டது.
இன்று கூட இங்கே உளவுத்துறை போலீசார் அனுப்பப்பட்டுள்ளனர். இன்னும் வெளியாகாத ஒரு படத்திற்கு எதற்காக இப்படி ஒரு நெருக்கடி..? நாங்கள் நடந்த நிகழ்வை மட்டுமே படமாக எடுத்துள்ளோம். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்காக தமிழ்நாடு அரசிடம் நெருக்கடி கொடுப்பதை தடுக்குமாறு கோரிக்கை வைக்க இருக்கிறோம்" என்றார்.
இதையடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கூறுகையில், “இது ஒரு ஆவணப்படம் என்றாலும் ஒரு முழுநீள திரைப்படம் பார்ப்பது போல மிக நேர்த்தியாக, விறுவிறுப்பாக, நடந்த உண்மையை அப்படியே பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் எம்.எஸ்.ராஜ்.