தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மோடி இனி யார் தலையிலும் கை வைக்காமல் இருக்க வேண்டும் - இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

சென்னை: மோடி இனி யார் தலையிலும் கை வைக்காமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிக்கு ஆதரவு தருகிறோம் என இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தெரிவித்துள்ளது.

By

Published : Mar 8, 2021, 5:59 AM IST

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் செயற்குழு கூட்டம் பாரிமுனை மண்ணடி போஸ்ட் ஆபிஸ் தெருவில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் நேற்று (மார்ச்7) நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அதன் பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய தவ்ஹித் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.எம்.பாக்கர் கூறுகையில், 'தமிழ்நாட்டில் நடைபெறுவது அதிமுக ஆட்சி கிடையாது. தற்போது நடைபெறுவது மோடியின் ஆட்சியே ஆகும். ஜெயலலிதா இருந்த வரை பாஜகவால் தமிழ்நாட்டிற்குள் நுழைய முடியவில்லை. ஆனால், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பலரை குறிவைத்து பாஜக தமிழ்நாட்டிற்குள் நுழைந்துள்ளது.
சசிகலா விரைவில் முன்னோக்கி பாய்வார்

நாங்கள் நோய்வாய்ப்பட்டு சிறைக்கு சென்று வெளிவந்த சசிகலாவை சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினோம். அவர்களிடம், நாங்கள் கூறியது பாஜகவை ஆதரிக்காதீர்கள் என்று தான். தற்போது, சசிகலா பின்வாங்கி தான் இருக்கிறார். ஜெயலலிதா பின்வாங்கி முன்னோக்கி பாய்ந்ததைபோல சசிகலாவும் விரைவில் முன்னோக்கி பாய்வார்.

மோடி இனி யார் தலையிலும் கை

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கட்சியின் வரலாற்றில் பாஜகவிற்கு எதிராகவும், மோடி இனி யார் தலையிலும் கை வைக்காமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் திமுகவிற்கு ஆதரவு தருகிறோம். தமிழ்நாடு மக்கள் திமுக மற்றும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சியினரை வெற்றி பெற செய்ய வேண்டும்.
நயவஞ்சகத்தின் மறு உருவம்

நயவஞ்சகத்தின் ஒட்டு மொத்தமாக இருக்கும் எடப்பாடி, மோடியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அதிமுக, அதன் கூட்டணியில் உள்ள பாமக, பாஜக, தமாகா போன்ற கட்சிகளை வீழ்த்த வேண்டும்.

திமுக கூட்டணியில் மீதமுள்ள கட்சிகளை ஒன்றிணைத்தால் அனைத்து தொகுதிகளிலும் பாசிசத்தை ஒழித்துவிடலாம். திமுக கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதே இந்திய தவ்ஹித் ஜமாத்தின் செயற்குழுவில் ஒரு மனதாக எடுக்கப்பட்ட முடிவாகும். முஸ்லீம்கள் மட்டுமில்லாமல் அனைத்து மக்களும் தெளிவாக உள்ளனர். பாஜகவையும், அதிமுகவையும் துறத்தி அடிப்பதையே குறிக்கோளாக தங்கள் எண்ணத்தில் வைத்துள்ளனர்.

தவ்ஹீத் ஜமாஅத் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு
ஸ்டாலினை பார்க்க தேவை இல்லை

மக்கள் நலனை கருத்தில் கொண்டு திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளோம். இதற்காக திமுக தலைவர் ஸ்டாலினை பார்க்க வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. அவர் எங்களை பார்க்க விரும்பினால் மரியாதை நிமர்த்தமாக சந்திப்போம்.

தேர்தல் ஆணையம் மிகுந்த கவனம்

தேர்தல் நாள் மற்றும் முடிவு அறிவிப்புக்கு இடையே இருக்கும் கால அவகாசத்தில் ஓட்டு பெட்டிகள் வைக்கும் எதாவது செய்துவிடுவார்கள் என்ற அச்சம் தேவையில்லை. அது சாத்தியமில்லாத விஷயம். கோயம்புத்தூர், திருப்பூர், கன்னியாகுமரி போன்ற இடங்களில் கலவரத்தை ஏற்படுத்த பலர் முயற்சித்து வருகின்றனர். இதனால் தேர்தல் ஆணையம் மிகுந்த கவனத்துடன் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

ஜெயலலிதா இல்லாத இந்த 4 ஆண்டில் பாஜக மற்றும் அதிமுகவின் கூட்டணியினர் பல்வேறு ஆட்டங்களை ஆடிவிட்டனர். இதற்கு மக்கள் தகுந்த பதில் அளிக்க வேண்டும்' என அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details