மதுரை தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது, அதன்படி 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு, சுற்றுச்சுவர் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளும் தொடங்கின. ஆனால், தற்போதுவரை பணிகள் தாமதமாக நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், இதுதொடர்பாக திமுத தலைவர் மு.க. ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்டாலின் பேஸ்புக் பதிவு
அதில், "மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நிலத்தை அதிமுக அரசு இதுவரை மத்திய அரசுக்கு வழங்காமல் தாமதம் செய்துகொண்டிருக்கிறது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு அளித்துள்ள பதில், மதுரை மண்டலத்தில் வாழும் பொதுமக்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது.
2015இல் அறிவிக்கப்பட்டு - நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு - வாக்காளர்களை ஏமாற்றும் நோக்கில், நாடாளுமன்றத் தேர்தலுக்காக அவசரம் அவசரமாக, 2019 ஜனவரி மாதத்தில் பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது. முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்ற இந்த விழா நடைபெற்று இரண்டு ஆண்டுகளாகப் போகிறது. ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலத்தை இன்னமும் ஒப்படைக்கவில்லை. ஜிக்கா நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டு அதுவும் கையெழுத்து ஆகவில்லை!