சென்னை : கோவா மாநிலத்தின் முதலமைச்சராக பிரமோத் சாவந்த் இன்று (மார்ச் 28) இரண்டாவது முறையாக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை பதவி பிரமாணம் மற்றும் இரகசிய காப்பு பிரமாணம் செய்துவைத்தார்.
இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் கோவா முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் அவர் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், “கோவா முதலமைச்சராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள டாக்டர் பிரமோத் பி. சாவந்த்துக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கோவா மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அவருக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார். ஆயுர்வேத மருத்துவராக பணியை தொடங்கி இன்று மாநிலத்தின் முதலமைச்சராக உயர்ந்துள்ளார் பிரமோத் சாவந்த்.
நாட்டில் கோவிட் பரவல் உச்சத்தில் இருந்தபோது கடற்கரை மாநிலமான கோவாவில் கோவிட் பரவலை கட்டுக்குள் கொண்டுவந்தவர் சாவந்த். அண்மையில் நடந்த 5 மாநில தேர்தலில் கோவா மாநிலத்தில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றது.
இதையடுத்து மாநிலத்தின் முதலமைச்சராக 48 வயதான பிரமோத் சாவந்த், தொடர்ந்து 2ஆவது முறையாக பொறுப்பேற்றுள்ளார். கோவாவில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 20 தொகுதிகளில் வென்று பாஜக அங்கு ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கோவா முதலமைச்சராக பதவியேற்றார் பிரமோத் சாவந்த்