சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் நிறைவடைந்ததும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்ற மாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றவேண்டும் என கடந்த கூட்டத்தொடரில் திமுக சார்பில் கடிதம் அளிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தொடரிலும் அதனை வலியுறுத்தி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களைப்போல் தமிழ்நாடு சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்ததச் சட்டத்தை அனுமதிக்க மாட்டோம். அதனை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். டெல்லியைப் போல் தற்போது தமிழ்நாட்டு மக்களும் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்றவற்றை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.
அவ்வாறு வண்ணாரப்பேட்டையில், அறவழியில் போராடிய மக்கள் மீது தடியடி நடத்த காவல்துறையை தூண்டியது யார்? தடியடி நடத்தியதன் காரணமாக அங்கு வன்முறை சம்பவம் ஏற்பட்டிருக்கிறது. சம்பவ இடத்திற்கு முதலமைச்சரோ அமைச்சர்களோ சென்று பார்த்திருக்கவேண்டும்.
போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்தது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறவேண்டும். மேலும், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் இயற்ற வேண்டும்" என்றார்.