இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை, அனைத்து மாநில மக்கள் நல்வாழ்வு துறை அலுவலர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ், தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநர் செந்தில் ராஜ் உள்ளிட்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், கொரோனா வைரஸ் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் இந்திய அளவில் நடத்தப்பட்டது. இதில் நேபாளத்தில் ஒருவர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது என்றார்.
மேலும், தமிழ்நாட்டில் ஏற்கனவே எபோலா, நிபா வைரஸ் காய்ச்சலை தடுக்க எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையைப்போல் இதற்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.