சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மழையை எதிர்கொள்ள முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு எந்தவித சிரமமும் இன்றி மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
காவிரி ஆற்றில் வெள்ளம் செல்லும் இடங்களில் சில இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மரம் விழுந்த காரணத்தால் 150 மின்மாற்றிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இன்று (ஆக.05) மாலைக்குள் நீலகிரி மாவட்டத்தில் சீரான மின்சாரம் விநியோகிக்கப்படும்.
சீரான மின்சாரம் விநியோகிக்க 234 தொகுதிகளிலும் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1.11 ஆயிரம் மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. 10 ஆயிரம் கி.மீ., மின் கம்பிகள் தயார் நிலையில் உள்ளன. கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் உள்ள மின்மாற்றிகள் மற்றும் துணை மின் நிலையங்கள் உள்ள இடங்களின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.