சென்னை: தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடரில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அப்போது, பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின் உற்பத்தியை அதிகரிப்பது, கொள்முதல் செய்து மின்வெட்டை தடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதலளித்து பேசியதாவது, கடந்த திமுக ஆட்சியில் மாநிலத்திலே சுமார் 7 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை கலைஞர் மேற்கொண்டார். அதுவும் கடந்த அதிமுக ஆட்சியில் 2 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி அளவிற்கு குறைந்தது. அதோடு தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதனிடையே எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், மொத்த உற்பத்தியை அதிகரிப்பது , நிர்வகிக்கும் திறன், நுகர்வோர் தேவை எப்படி உள்ளது என்று கேள்வி எழுப்பினார். இதற்கும் செந்தில் பாலாஜி பதலளித்து பேசியதாவது, திமுக ஆட்சியில் மின் தடையை போக்க குறுகிய கால ஒப்பந்தங்கள் போடப்பட்டு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சியில் நீண்ட கால ஒப்பந்தங்கள் போடப்பட்டதோடு, 9 ரூபாய்க்கு வாங்கியுள்ளனர்.