சென்னை: உயர்கல்வி நிலையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மா. சுப்பிரமணியன் தலைமையில் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளரிடம் பேசிய மா. சுப்பிரமணியன், "சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதியில் ஒருவருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டதை விடுதியில் அவருடன் தொடர்புடைய 300 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து மொத்தமாக ஒன்பது பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
பொறியியல் கல்லூரி
மேலும், விடுதியில் மீதமுள்ள 471 நபர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்ததில் ஒருவருக்கும் தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது. பொறியியல் கல்லூரிகளில் நான்கு லட்சம் மாணவர்கள் உள்ள நிலையில் 18 வயதைத் தாண்டிய மாணவர்களில் 46 விழுக்காட்டினர் மட்டுமே முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர்.
12 விழுக்காட்டினர் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். எனவே, கல்லூரிகளில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி கட்டாயம் எனவும், தடுப்பூசி போட்டால் மட்டுமே வகுப்பறையில் அனுமதிக்கப்பட வேண்டும்.
இது தொடர்பாகத் தனியார் பொறியியல் கல்லூரி உள்பட அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் உயர் கல்வித் துறை கடிதம் எழுத உள்ளது. சென்னை ஐஐடியில் 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
கால்நடை மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள், ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். அதே நேரத்தில் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு வரும் நபர்களும் தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும்.
குழுவாக அமர்ந்து சாப்பிட அனுமதிக்கக் கூடாது
கல்லூரி விடுதிகளில் உணவருந்தும் கூடத்தில் தொற்றுப் பரவ வாய்ப்புள்ளது. எனவே உணவருந்தும் இடத்தில் பகுதி பகுதியாக மாணவர்களை அனுமதிக்க வேண்டும். மாணவர்கள் குழுவாக அமர்ந்து சாப்பிடவும் அனுமதிக்கக் கூடாது. மறு அறிவிப்பு வரும்வரை ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் வகையிலான தட்டுகளை மட்டுமே உணவு விடுதிகளில் பயன்படுத்த வேண்டும்.
மேலும், கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது. கல்லூரிகளில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்குத் துறையின் அனுமதியை முன்கூட்டியே பெற வேண்டும். வகுப்பறையில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும், வகுப்பறைக்கு வெளியே சானிடைசர் வைக்கப்பட வேண்டும் போன்ற முடிவுகள் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகளில் தடுப்பூசிகள் போட முகாம் அமைக்கக் கோரினால், அங்கேயே முகாம் அமைத்துத் தரப்படும். ஒரு தவணை தடுப்பூசி போட்டால்கூட வகுப்பறைக்கு மாணவர்களை அனுமதிக்கலாம். மாணவர்கள் கட்டாயம் விரைவாகத் தடுப்பூசி போட வேண்டும்.
மேலும், தகுந்த இடைவெளியைப் பின்பற்ற முடியாத விளையாட்டுகளுக்குத் தடைவிதிப்பது தொடர்பாக விரைவில் அறிக்கை வெளியிடப்படும்.
முடிவுகள் வந்தவுடன் தெரிவிக்கப்படும்
வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் வந்த 16 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது, அனைவரும் நலமுடன் உள்ளனர். முதல்கட்ட அறிக்கையில் டெல்டா வகை கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், உறுதிசெய்திட இவர்களது மாதிரிகள் மரபணு பகுப்பாய்விற்கு பூனே அனுப்பப்பட்டுள்ளது முடிவுகள் வந்தவுடன் தெரிவிக்கப்படும்" என்றார்.
கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை இந்தக் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி, உயர் கல்வித் துறை முதன்மைச் செயலர் கார்த்திகேயன், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் லட்சுமி பிரியா, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் வேல்ராஜ், சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர ராமமூர்த்தி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:'கல்லூரியில் கலை நிகழ்ச்சியைத் தவிர்க்க வேண்டும்'