சென்னை:தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் மற்றும் சென்னை ஐஐடி (Madras IIT) இணைந்து மருத்துவத்துறையை மேம்படுத்தவும், நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்ப்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில், தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் மாவட்ட அளவிலான சுகாதார உயர் அலுவலர்களுக்கான கருத்தரங்கைத் தொடங்கி வைத்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவை குறித்த கையேட்டினை வெளியிட்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், 'ஐக்கிய நாடுகளின் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்கான அனைவருக்கும் அனைத்து வயதினருக்கும் ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு அடைய தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் மூலம் பல்வேறு செயல்பாடுகள் உலக வங்கியின் உதவியுடன் 'தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் 2019' தொடங்கப்பட்டது.
உலக வங்கியில் ரூ.1,219.08: கோடி இந்தத் திட்டம் ரூ.2,854.74 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. உலக வங்கி பங்களிப்பு ரூ.1998.32 கோடி மற்றும் தமிழ்நாடு அரசு பங்களிப்பு ரூ.856.42 கோடி ஆகும். உலக வங்கி இதுவரை ரூ.1,219.08 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம், ஐக்கிய நாடுகள் அமைப்பின் (United Nations Organization) பூர்த்தி செய்யப்படாத இலக்குகளான தொற்றா நோய்களை கட்டுப்படுத்துதல், விபத்து மற்றும் அவசர கால சிகிச்சைகளை மேம்படுத்துதல், மனநல சேவைகளை வழங்குதல் ஆகியவற்றை வருகிற 2030ஆம் ஆண்டிற்குள் அடைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ரூ.615.68 கோடி:தொற்றா நோய்கள் மற்றும் அவற்றின் ஆபத்து காரணிகளின் தற்போதைய விகிதம், மேலும் அதனை தடுப்பதற்கான உத்திகள் குறித்து ஆய்வு செய்தல் மூலமாக தொற்றா நோய்களின் ஆபத்து காரணிகள் மற்றும் பாதிப்பின் விகிதம், குறிப்பாக கட்டுப்படுத்தப்படாத நீரழிவு நோய் (Diabetes) மற்றும் உயர் ரத்த அழுத்தம் (High blood pressure) காரணமாக உடலின் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்டு மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக பாதிப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதை கண்டறிந்து தடுக்கும்பொருட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 2021' ஆகஸ்ட் 5ஆம் தேதி சாமனப்பள்ளியில் தொடங்கப்பட்டது. இதன் மொத்த நிதி பங்களிப்பு ரூ.615.68 கோடி ஆகும்.
தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டின், மாநில குற்றப்பிரிவு பதிவேட்டின்படி, 55,713 சாலை விபத்துகள் எற்பட்டு, 17,544 பேர் படுகாயமும், 14,912 பேர் இறந்துள்ளார்கள். இதனைத் தடுக்கும் பொருட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் 'இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 திட்டம்', மேல்மருவத்தூரில் 2021 டிசம்பர் 18ஆம் தேதி தொடங்கப்பட்டது.