எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவு தமிழ் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறப்பிற்கு திரையுலகினரும், அரசியல் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். பொதுமக்கள் அவரது உடலுக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜு எஸ்.பி.பி. மறைவுக்கு இரங்கல் அறிக்கை வெளியி்ட்டுள்ளார். அதில், "தமிழ் திரையுலகில் பின்னணி பாடலில் கொடிகட்டிப் பறந்த எஸ்.பி.பி. காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், ஆழ்ந்த வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இழப்பு தமிழ் திரையுலகத்திற்கு ஒரு பேரிழப்பாகும்.
எம்ஜிஆர் இயக்கி நடித்த "அடிமைப்பெண்" படத்தில் ஆயிரம் நிலவே வா என்ற பாடலின் மூலம் எஸ்.பி.பி. புகழின் உச்சிக்குச் சென்றார். ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சத்தில் இடம்பிடித்தவர். 'கேளடி கண்மணி' என்ற திரைப்படத்தில் 'மண்ணில் இந்தக் காதல் இன்றி' என்ற பாடலை மூச்சுவிடாமல் பாடி புதிய சரித்திரம் படைத்தவர்.
தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் உள்ள திரைப்படங்களில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். இன்று (செப்.25) அவருடைய இழப்பு தமிழ் திரையுலகத்திற்கு ஒரு பேரிழப்பு என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு தெரிவித்து செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:இனி இறைவன் சபையில் கலைஞன் நீ...! - நடிகர் மயில்சாமி இரங்கல்