தமிழ்நாடு

tamil nadu

‘சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’

சென்னை: சசிகலா மற்றும் அவரைச் சார்ந்தவர்களுக்கும், அதிமுகவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என ஏற்கனவே தீர்மானம் போடப்பட்ட நிலையில் இனி யார் என்ன சொன்னாலும் அதில் உடன்பாடு ஏற்படாது என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

By

Published : Feb 26, 2021, 7:59 AM IST

Published : Feb 26, 2021, 7:59 AM IST

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்
செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை ராயபுரத்திலுள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மருத்துவமனையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று முன்தினம் (பிப். 24) பிறந்த 14 பெண் குழந்தைகள், 13 ஆண் குழந்தைகள் என மொத்தம் 27 குழந்தைகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் தங்க மோதிரம் அணிவித்து அக்குழந்தைகளின் தாய்மார்களுக்குப் பரிசுப் பொருள்களை வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அதிமுக அரசின் நலத்திட்டங்களின் ஒரு பகுதியாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று பிறந்த 27 குழந்தைகளுக்கு இன்று (பிப். 25) தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

மேலும், தற்போதுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களுக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “அதிமுக அரசின் அசாத்தியமான சாதனைகளையும், வரவேற்புமிக்கத் திட்டங்களையும் பொறுத்துக்கொள்ள முடியாமல் திமுக தலைவர் ஸ்டாலின், பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டுவருகிறார்.

மேலும், அதிமுக அரசின் ஆட்சியில் திமுகவினரைத் தவிர மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் உள்ளனர். திமுகவினர் மட்டுமே அதிமுக அரசின் ஆட்சியைக் கண்டு வயிற்றெரிச்சல்பட்டு அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

மேலும், சசிகலா மற்றும் அவரைச் சார்ந்தவர்களுக்கும், அதிமுகவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என ஏற்கனவே தீர்மானம் போடப்பட்ட நிலையில், இனி யார் என்ன சொன்னாலும் அதில் உடன்பாடு ஏற்படாது. அதிமுக ஏற்கனவே எடுத்த நிலைப்பாட்டில்தான் இறுதிவரை இருக்கும்.

கரோனா காலகட்டத்தில் மக்களின் நிலையைக்கூட கண்டறிய வெளியில் வராத தினகரனும், எந்தவொரு நலத்திட்டங்களையும் மக்களுக்குச் செய்யாத அமமுகவும் தற்போது தேர்தல் நெருங்குவதால் அதிமுக அரசை குறைகூறத் தொடங்கியுள்ளனர். மக்களுக்கு அதிமுக மீதுள்ள நம்பகத்தன்மையை யாராலும் அழிக்க முடியாது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “கூட்டணியைப் பொறுத்தவரை எந்தக் குளறுபடியும் இல்லை. அதிமுக கூட்டணியில் மேலும் கட்சிகள் இணையுமே தவிர கூட்டணியிலிருந்து எந்தக் கட்சியும் வெளியேறாது.

அதுமட்டுமல்லாமல் அரசியல் நட்பு வட்டங்களுக்குள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வது வழக்கமான செயல். அதற்கும் கூட்டணிக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை” என உறுதிபடத் தெரிவித்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்

மேலும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தி குறைப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவருவதாகவும், விரைவில் மத்திய அரசு அதற்கான வழிவகைகளைச் செய்யும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'வசூல் செய்வது மட்டுமே திமுகவின் வேலை!' - எம்.சி. சம்பத்

ABOUT THE AUTHOR

...view details