சென்னை கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற டி.என்.பி.எஸ்.சி ஊழியர் சதாசிவம்(65). இவர் கோட்டூர்புரம் இந்தியன் வங்கியில் கணக்கு வைத்து, அதில் ஒரு லட்சத்திற்கு மேலாக பணம் சேமித்து வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 16) இந்தியன் வங்கியின் மேலாளர் பேசுவதாக கூறி, அடையாளம் தெரியாத நபர் இவரது செல்போன் எண்ணுக்கு அழைப்பு வந்துள்ளது.
அப்போது போனில் பேசிய நபர், உங்களது வங்கி ஏ.டி.எம் கார்டை புதுப்பிக்க வேண்டும், உடனடியாக கார்டின் மேல் உள்ள 16 நம்பரை சொல்லும் படியாகவும், மொபைலுக்கு வரும் நான்கு இலக்க ஓடிபி எண்ணை தெரிவிக்கும் படியும் கூறியுள்ளார். இதனை நம்பிய சதாசிவம், கார்டு நம்பர், ஓடிபி எண் ஆகியவற்றை கூறியுள்ளார்.
பின்னர், இவரது வங்கிக் கணக்கிலிருந்து 5000, 8000, 10000, 25000 என தொடர்ச்சியாக பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. அக்கம் பக்கத்தினரிடம் காட்டியபோது வங்கி மேலாளர் போல் பேசி சதாசிவத்தை ஏமாற்றியது தெரிய வந்தது.
இதையடுத்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் சதாசிவம் புகார் அளித்தார். இந்த நிலையில் அதே போல் நேற்று (ஆகஸ்ட் 16) காலை இரண்டு புது நம்பரில் இருந்து அழைப்பு வந்தது எனவும் அதில் பேசிய அடையாளம் தெரியாத நபர்கள் தன்னிடம் உள்ள ஏடிஎம் கார்டு தகவல்களை கேட்டதாகவும், பின் இணைப்பை துண்டித்துவிட்டதாகவும் சதாசிவம் தெரிவித்துள்ளார்.
இதேபோல் சென்னை பள்ளிப்பட்டு பகுதியைச் சேரந்தவர் மருத்துவர் லீலா ராமகிருஷ்ணன் (45) என்பவர், பல்லாவரத்தில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்துள்ளார். நேற்று முன்தினம் இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.35 ஆயிரம் பணம் எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த லீலா இது குறித்து, கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகாரளித்தார். இந்த இரண்டு சம்பவம் குறித்தும் கோட்டூர்புரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல், சென்னை அயனாவரம் பங்காரு தெருவில் வசித்து வரும் சுகன்யா(25) என்பவர், இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் இவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், இந்தியன் வங்கியிலிருந்து பேசுவதாக கூறி, ஏடிஎம் கார்டு காலாவதியாகி விட்டதால் அதனை புதுபிக்க வேண்டும் என வங்கி எண், ஏடிஎம் கார்டு எண், கடவு சொல்லை கேட்டுள்ளார். இதனை நம்பிய சுகன்யாவும், அந்த நபரிடம் ஏடிஎம் கார்டு எண், கடவு சொல் ஆகியவற்றை கூறியுள்ளார்.
இந்நிலையில், சுகன்யா நேற்று பணம் எடுக்க வங்கிக்கு சென்ற போது, அவரது கணக்கில் இருந்த ரூ. 84 ஆயிரம் எடுக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், இது குறித்து அயனாவரம் காவல் நிலையத்தில் புகாரளித்ததன் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:உதவி கேட்டவரிடம் ரூ.50 ஆயிரம் ஆட்டைய போட்ட ஏடிஎம் திருடன்