தமிழ்நாடு

tamil nadu

ஏடிஎம் கொள்ளையில் மேவாட் கும்பல்!

சென்னை: அரங்கேறிய பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) ஏடிஎம் கொள்ளையில் மேவாட் கும்பல் மையப்புள்ளியாக நின்று செயல்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

By

Published : Jun 23, 2021, 10:43 PM IST

Published : Jun 23, 2021, 10:43 PM IST

மேவாட் கும்பல்
மேவாட் கும்பல்

ஹரியானா மாநிலத்தில் உள்ள மேவாட் மாவட்டம் குற்றவாளிகளின் கூடாரமாக இருந்து வருகிறது. இந்தியா முழுவதும் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் மேவாட் கொள்ளை கும்பலின் ஆதிக்கம் அதிகமாக காணப்படுகிறது.

திருட்டு என்பது புதிதல்ல

தற்போது சென்னையில் அரங்கேறியுள்ள ஏடிஎம் கொள்ளையின் பின்னணியிலும் இந்த கும்பல்தான் கைவரிசையை காட்டியுள்ளது. மேவாட் கொள்ளை கும்பலுக்கு ஏடிஎம் திருட்டு என்பது புதிதல்ல. இந்தியாவில் ஏடிஎம்-ல் பணம் கொள்ளை போனால் விசாரணையில் நூல்பிடித்தாற்போல மேவாட் கொள்ளை கும்பலே அதில் மையப்புள்ளியாக இருக்கும்.

சமீபத்தில் கோயம்புத்தூரில் கைவரிசை

கடந்த காலங்களில் கேரளா, ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இந்த கும்பல் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் இவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் கோயம்புத்தூர் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தெடுத்து லாரியில் ஏற்றி சென்றதில் மேவாட் கும்பலில் சிலர் கைது செய்யப்பட்டனர்.

மாவட்டத்திற்குள் நுழைய முடியாது

இந்தக் கும்பலின் மையப்புள்ளியான மேவாட் மாவட்டத்திற்குள் காவல் துறையினர்கூட நுழைய முடியாத அளவிற்கு கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளனர். ஒரே சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் கொலை, கால்நடை திருட்டு, கொள்ளை என தனித்தனியே செயல்பட்டாலும், ஒவ்வொரு செயலையும் தெளிவாக திட்டமிட்டு அரங்கேற்றி வருகின்றனர்.

வழக்கறிஞர் குழுவுடன் நட்பு

இவர்களுக்கென வாதாட வழக்கறிஞர் குழு, சரணடைய ஒரு கூட்டம், தவறு செய்தால் அவர்களுக்குள்ளேயே தண்டனை வழங்க தலைவர்கள் என தனி ராஜ்ஜியம் நடத்தி வருகின்றனர். இவர்கள் பொதுவாக தென் மாநிலங்களை குறிவைத்தே செயல்பட்டுகின்றனர். தங்களின் திட்டங்களை நிறைவேற்றிய பின்னர் மீண்டும் விரைந்து ஹரியானா சென்று பதுங்கிக்கொள்கின்றனர். ஒரு குழு தனது திட்டத்தை நிறைவேற்றியதும் அடுத்த குழு செயலில் இறங்கும். அப்படிப்பட்ட ஒரு கும்பல்தான் சென்னையை கலங்கடித்துள்ளது.

நீண்ட கால திட்டம்

ஒரு கொள்ளையை அரங்கேற்றும் முன்னர் நீண்ட கால திட்டமிடலில் ஈடுபடும் இவர்கள் சென்னையில் அரங்கேற்றியுள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் கொள்ளைக்கும் தெளிவாக திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர். 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் ருமேனியா, ஆஸ்திரேலியா ஆகிய வெளி நாடுகளில் பணம் முள்கரண்டி கொண்டு பணம் திருடுதல் (Forking), பணம் பறித்தல் (Cash Grabbing) முறைகளில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளைகளை அடிப்படையாகக் கொண்டு ஹரியானா கும்பல் பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் கொள்ளையை அரங்கேற்றியுள்ளது.

சென்னை காவல்துறை அதிரடி

சென்னையில் எந்த ஏடிஎம் இயந்திரத்தில் இதுபோன்ற கொள்ளை முறைகளை பயன்படுத்த முடியும் என நிதானமாக திட்டமிட்டு தமிழ்நாட்டிற்கு இந்த கும்பல் வந்துள்ளனர். குறுகிய காலத்தில் பணம் செலுத்தும் இயந்திரங்களில் (CDM) கொள்ளையடிக்க முடியுமோ அதை விரைவாக செய்து முடித்துள்ளனர்.

ஆனால் புகார் வந்த 2 நாட்களிலேயே சென்னை காவல் துறையினர் அந்த கும்பலை சேர்ந்தவரை கைது செய்து, அவர்களின் திட்டத்திற்கு மரண அடி கொடுத்துள்ளது. விரைவில் இந்த கும்பலை சேர்ந்த அனைவரையும் கைது செய்து, காவல் துறை தனது கடமையை நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேவாட் கும்பல்

இதையும் படிங்க: ஏடிஎம்-ல் நூதன முறையில் கொள்ளை

ABOUT THE AUTHOR

...view details