சென்னை: இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சீனா, ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்கள், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் இரு ஆண்டுகள் பயிற்சி பெறுவதற்கான கட்டணத்தை ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு அறிவித்தாலும், அது இன்னும் செயல்பாட்டுக்கு வராததால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்ப மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகளில் இந்த மாணவர்கள் பயிற்சி பெற அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பும் செயல் வடிவம் பெறாதது ஏமாற்றமளிக்கிறது. ரஷ்யா, அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், கிர்கிஸ்தான், உக்ரைன், சீனா, ஜெர்மனி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவம் படித்து திரும்புகின்றனர்.
அவ்வாறு மருத்துவம் படித்த மாணவர்கள் மத்திய அரசின் தேசிய தேர்வு வாரியம் நடத்தும் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தேர்வில் (Foreign Medical Graduates Examination) வெற்றி பெற வேண்டும். அதன் பின்னர் ஏதேனும் ஒரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரு ஆண்டுகள் பயிற்சி முடித்த பிறகுதான் மருத்துவ கவுன்சிலில் மருத்துவராகவே பதிவு செய்து கொள்ள முடியும்.
தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடு சென்று மருத்துவம் படித்து, வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தேர்விலும் வெற்றி பெற்ற 600க்கும் மேற்பட்டோர் இரு காரணங்களால் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்து பயிற்சி பெற முடியாமல் தவிக்கின்றனர்.
அவற்றில் முதன்மையானது, வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்கள் சென்னையில் உள்ள 4 மருத்துவக்கல்லூரிகள் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சில மருத்துவமனைகளில் மட்டுமே பயிற்சி பெற முடியும். இந்த மருத்துவமனைகளில் வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 10 விழுக்காட்டில் இருந்து 7.5% ஆக குறைக்கப்பட்டு விட்டதால், அவர்களுக்கான பயிற்சி இடங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது.
தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 மருத்துவக்கல்லூரிகளிலும் வெளிநாட்டு மருத்துவ மாணவர்கள் பயிற்சி பெற அனுமதிக்கப்படுவர் என்று தமிழ்நாடு அரசின் சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அதுவும் வாக்குறுதியாகவே இருப்பதால் மருத்துவ மாணவர்களின் பிரச்னை தீரவில்லை.
இரண்டாவதாக, வெளிநாட்டு மருத்துவ மாணவர்கள் அரசு மருத்துவக்கல்லூரிகளில் இரு ஆண்டு பயிற்சி பெறுவதற்காக மருத்துவக்கல்லூரிகளுக்கு ரூ.2 லட்சமும், எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு தடையின்மை சான்றிதழ் பெற ரூ.3.20 லட்சமும் செலுத்த வேண்டும்.