தமிழ்நாடு

tamil nadu

பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை: நீதிபதி வேதனை

By

Published : Dec 15, 2021, 6:37 AM IST

அரசுத் துறைகள், பொது நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சமீப காலங்களில் அதிகம் காணப்படுவதாக வேதனை தெரிவித்துள்ள நீதிபதி சுப்ரமணியம், இந்த குற்றச்சாட்டுகளை அரசு அலுவலர்கள் தீவிரமாகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள்
பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள்

சென்னை:கல்பாக்கம் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றிய சக ஆண் ஊழியர் பாலியல் தொல்லை அளித்ததாகக் கடந்த 2013ஆம் ஆண்டு பெண் ஊழியர் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

அது குறித்து விசாரணை நடத்த, முதலில் அமைக்கப்பட்ட குழு விசாரணையைத் தொடங்காததால், இரண்டாவது குழு அமைத்து அணு ஆராய்ச்சி நிறுவனம் உத்தரவிட்டது. இந்த இரண்டாவது குழு விசாரித்து, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்த நிலையில், இந்த குழு விதிப்படி அமைக்கப்படவில்லை என, மூன்றாவது குழு அமைத்து உத்தரவிடப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம்

இதையடுத்து, பாலினப் பாகுபாடான முறையில் செயல்படக்கூடியவர்களைக் கொண்டு, மூன்றாவது குழு அமைத்ததை எதிர்த்தும், இரண்டாவது குழுவின் அறிக்கை அடிப்படையில் ஆண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியும் பெண் ஊழியர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

விசாரணை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவில், பணியிடத்தில் பெண்கள் பாதுகாப்பான சூழலில் பணியாற்றுவதை உறுதிசெய்ய வேண்டியது பணி வழங்வோரின் கடமை எனவும், பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்களில் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கில், புகார் அளித்து ஏழரை ஆண்டுகள் கடந்தும் முடிவை எட்டவில்லை எனக் கூறிய நீதிபதி, இப்படிப்பட்ட சூழலில் ஒரு பெண்ணால் எப்படி திறமையாக பணியாற்ற முடியும் என கேள்வி எழுப்பியதுடன், விசாரணையை தாமதப்படுத்துவது என்பது கடமை தவறிய செயல் என்றும், குற்றமாகவும் கருதப்பட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.

புதிய குழு அமைக்க உத்தரவு

மூன்றாவது குழு அமைத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், பணியிடத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான சட்டத்தைப் பின்பற்றி, புதிய குழுவை ஒரு மாதத்தில் அமைக்க வேண்டும் என பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள்

அந்த குழு 6 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும், அதன் அறிக்கை கிடைத்தவுடன் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருந்தால், குற்றவியல் மற்றும் துறை ரீதியான நடவடிக்கையை விரைவில் மேற்கொள்ள உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

மேலும், அரசுத் துறைகள் மற்றும் பொது நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சமீப காலங்களில் அதிகம் காணப்படுவதாக வேதனை தெரிவித்துள்ள நீதிபதி சுப்ரமணியம், இந்த குற்றச்சாட்டுகளை அரசு அலுவலர்கள் தீவிரமாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:பெங்களூரு விமான நிலைய சம்பவம்: விஜய்சேதுபதிக்கு அழைப்பாணை

ABOUT THE AUTHOR

...view details