சென்னை: நெசப்பாக்கத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பவர் தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு அளித்த மேல்முறையீட்டு மனுவில், ராமாபுரம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஜெய்பாலாஜி நகர் மெயின்ரோடு, ஜெய்பாலாஜி நகர் விரிவாக்கம், ஜெய்பாலாஜி நகர் இணைவு ஆகியப் பகுதிகளில் அருகருகே அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டிப் பலகையில் ஜெய்பாலாஜி நகரின் மூன்று பகுதிகளும் சென்னை மாநகராட்சியின் எந்த வார்டினை சேர்ந்தது என்று குழப்பம் அடையும் நிலையில் உள்ளது. ஒரு தெரு, வார்டு குறித்த அறிவிப்புப் பலகைகள் 2 இடங்களிலும் வைக்கப்பட்டுள்ளது.
இதனால் தண்ணீர், சொத்து வரி, எரிவாயு, அஞ்சல், கூரியர் போன்ற பொது சேவைகளைப் பயன்படுத்துவதிலும், பயன்பாட்டுச் சேவைகளை பயன்படுத்துவதிலும் பல குழப்பங்கள் உள்ளன எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவின் மீது விசாரணை மேற்கொண்ட தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் முத்துராஜ் அளித்துள்ள தீர்ப்பில், விசாரணையில் பங்கேற்ற பொதுத்தகவல் அலுவலர், மனுதாரர் தெரிவித்துள்ள பகுதியினை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும், மனுதாரருக்கு முழுமையான தகவல்களை வழங்குவதாகவும் தெரிவித்தார்.
மனுதாரர் தங்கள் பகுதியில் முறையான பெயர்ப் பலகை வைக்கப்படாததால், தண்ணீர் வரி, சொத்து வரி செலுத்துதல், எரிவாயு, அஞ்சல், கூரியர் போன்ற பொது சேவைகளைப் பயன்படுத்துவதிலும், இன்றைய பயன்பாட்டுச் சேவையில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கோடிக்கணக்கான மக்கள் வாழ்கின்ற பெருநகரமான சென்னையில், போக்குவரத்து வழிகளில் முறையான பெயர்ப் பலகைகள் வைக்கப்படாமல் உள்ளது சரியானதல்ல. மேலும், சென்னை மாநகரப் பிரதான சாலைகளில், ஒரு சில இடங்களில் போக்குவரத்து சிக்னல்களின் அருகிலேயே மருந்தகம் (Medical Shop) இருக்கின்றன. அதற்காக பச்சை விளக்கு அடையாளக்குறியீடு (+Symbol) எரிய விடப்படுவதால், பொதுமக்களால் சிக்னல்களை சரியாக புரிந்துகொள்ள இயலாமல், விபத்துகள் ஏற்படுவதற்கு காரணமாகின்றன.
வெளிநாடுகளான லண்டனில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், சாலைகளில் தெருவிளக்கு கம்பங்களில் மின்சாரம் பாயாத வகையில், பிளாஸ்டிக் பலகையினைப் பயன்படுத்தி, தெருக்களின் பெயர்கள் மற்றும் வழிகளுடன் கூடிய பெயர்ப் பலகை பொருத்தப்பட்டுள்ளது.
அதுபோன்று சென்னை பெருநகர சாலைகளின் முக்கியப் பகுதிகளில் சாலையின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பங்களில் வாகன ஓட்டிகளுக்கு கவனச்சிதறல் ஏற்படாத வகையில், சாலைகள் மற்றும் தெருக்களின் பெயரை மின்சாரம் பாயாத குறைந்த செலவினங்களில் பெயர்ப்பலகைகள் அமைக்கவும், வெளியூர் மற்றும் உள்ளூர் பயணிகள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், பேருந்து நிறுத்தங்களில் பெயரை பெரிய அளவிலான எழுத்துகளில் தெளிவாகத் தெரியும் வகையில் எழுதி வைத்திட வேண்டும்.
சென்னை மாநகராட்சியில் பொது மக்களுக்கு கவனச்சிதறல் ஏற்படாத வகையில் பிளாஸ்டிக் பலகையினைப் பயன்படுத்தி, தெருக்களின் பெயர்கள் மற்றும் வழிகளுடன் கூடிய பெயர்ப் பலகை வைக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 10 சதவீதம் வாரிசு அரசியல் சகஜம் தான் - அமைச்சர் பொன்முடி பளீச்!