தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மசாஜ் நிலையங்களில் பாலியல் தொழில் - விசாரணை நடத்த உள்ளூர் போலீசாருக்கு அதிகாரம் உண்டு; வாதத்தை முன்வைத்த அரசு வழக்கறிஞர்!

மசாஜ் நிலையங்களில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடத்த உள்ளூர் காவல் துறையினருக்கும் அதிகாரம் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை சார்பாக வாதாடிய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மசாஜ் நிலையங்களில் பாலியல் தொழில்
மசாஜ் நிலையங்களில் பாலியல் தொழில்

By

Published : Apr 13, 2022, 8:13 PM IST

சென்னை அண்ணா நகரிலுள்ள (வில்லோ ஸ்பா) மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக அண்ணா நகர் காவல் நிலையத்திற்குப்புகார் வந்தது. புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். இதில் உரிமையாளர் ஹேமா ஜூவாலினி உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மசாஜ் நிலையத்தின் உரிமையாளர் சார்பில் வழக்குத் தொடரப்பட்டு, காவல் துறை தொடர்ந்து புலன் விசாரண செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

கடந்தாண்டு பிறப்பக்கப்பட்ட இடைக்காலத்தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென காவல் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு நடைபெற்றது. அப்போது மனுதாரர் தரப்பில், ‘சுதந்திரமாக தொழில் நடத்தும் உரிமையில் காவல் துறை தலையிட முடியாது. சோதனையின் போது காவல் துறை உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை.

ஏற்கெனவே, மசாஜ் நிலையங்களில் சோதனை நடத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள், விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. விபசார தடுப்பு சிறப்பு அலுவலருக்கு தான் சோதனை நடத்த உரிமை உள்ளது’ எனத் தெரிவித்தனர்.

காவல் துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ‘ஏற்கெனவே சோதனைகள் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்குகளின்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பு முழுமையாக எடுத்துரைக்கப்படவில்லை. சோதனை தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை என்பதற்காக வழக்கை ரத்து செய்ய முடியாது என்றார்.

காவல் துறை விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால், அதனால் குற்றவாளி எந்த வகையில் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை கீழ் நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி தான் முடிவு செய்ய முடியும் என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மேலும், கடந்த 1987ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவில் உள்ளூர் காவல் நிலைய அலுவலர்களும் சோதனை நடத்துவதற்கான அதிகாரம் உள்ளது’ என்றும் விளக்கமளித்தார்.

நியாயமாய் தொழில் நடத்தும் உரிமையில் காவல் துறை தலையிடாது, ஆனால் தவறு நடக்கும் பட்சத்தில், அப்பாவி பெண்கள் பாதிக்கப்படும்போது காவல் துறை வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது, உரிய நடவடிக்கை எடுத்து அப்பாவி பெண்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம் என பல உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் வாதாடினார். இருதரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார்.

இதையும் படிங்க:ஆயுள் தண்டனை கைதி விடுதலையில் தாமதம் : அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details