சென்னை:தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்நிலையில், மறைந்த அரசியல் தலைவர்களின் சிலைகள் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையில் கள்ளக்குறிச்சி அருகே மாதவச்சேரியில் பேரறிஞர் அண்ணா சிலைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். இதற்கு பல்வேறு தலைவர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அண்ணா சிலைக்கு தீ வைப்பு: தலைவர்கள் கண்டனம்
கள்ளக்குறிச்சி அருகே பேரறிஞர் அண்ணா சிலைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பேரறிஞர் அண்ணா சிலையைக் கொளுத்தியுள்ளது கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டை வன்முறைக் காடாக்க நினைப்பவர்களை மக்கள் தண்டிப்பர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளும் சிதைக்கப்படுகின்றன. ஒடுக்கிட வக்கற்ற முதலமைச்சரின் போக்கு வெட்கக்கேடானது" என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கள்ளக்குறிச்சி அருகே மாதவச்சேரியில் பேரறிஞர் அண்ணா சிலைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்து கொளுத்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. பேரறிஞர் அண்ணா சிலைக்கு தீ வைத்த விஷமிகளை, காவல்துறையினர் விரைந்து கண்டறிந்து அவர்கள் தகுந்த தண்டனை பெறும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.