சென்னையில் சட்டப் படிப்பு முடித்த 400க்கும் மேற்பட்டோர் வழக்கறிஞர்களாக பதிவு செய்துகொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி பங்கேற்றார்.
இவர்களுக்கு காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும், வழக்கறிஞருமான கிருஷ்ணசாமி, புதிய வழக்கறிஞர் பதிவைத் தொடங்கி வைத்தார். பார் கவுன்சில் வழக்கறிஞர்கள், பதிவுக் குழு தலைவர் கே.பாலு, வழக்கறிஞர்களுக்குப் பதிவுக்கான பிரமாணம் செய்து வைத்தார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி வினீத் கோத்தாரி, ஆண்களுக்கு சரிசமமாக பெண் வழக்கறிஞர்களும் பதிவு செய்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. கடின உழைப்பு, நேர்மை, பணிவு, மனிதாபிமானம் ஆகிய குணங்கள் இருந்தால் வழக்கறிஞர்கள் தொழிலில் வெற்றி பெறலாம் எனக் குறிப்பிட்ட அவர், நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்ற உள்ள வழக்கறிஞர்கள், நாட்டின் நலனுக்கு விரோதமாகச் செயல்படக் கூடாது என அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், மூத்த வழக்கறிஞரும், முன்னாள் அட்டர்னி ஜெனரலுமான பராசரன், தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், துணைத்தலைவர் கார்த்திகேயன், இந்திய பார் கவுன்சில் இணை உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் புதிய வழக்கறிஞர்களுக்கு அறிவுரைகளை வழங்கினர்.
இதையும் படிங்க:மருத்துவ மாணவர்களின் விவரங்கள் தேசிய தேர்வு முகமையிடம் ஒப்படைக்க உத்தரவு!