சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ''தொழில் வளர் தமிழ்நாடு'' என்ற பெயரில், 9 தொழில் நிறுவனங்களுடன் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி, பல்வேறு திட்டங்களைத் தொடக்கி வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் வழித்தடம் தொடர்பாக சென்னை ஐஐடி மற்றும் டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆட்டோமொபைல் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தி, மருத்துவமனை மற்றும் சுகாதாரத்துறை, போக்குவரத்துத் துறை ஆகிய மூன்று துறைகளில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டன.
மேலும் தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்க, மின்சார இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும் ஏத்தர் எனர்ஜி, பிஒய்டி நிறுவனம் உள்ளிட்ட ஏழு நிறுவனங்களுடன் மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
இந்த ஒப்பந்தங்கள் மூலம் 5,027 கோடி ரூபாய் முதலீடு கிடைக்கப் பெறும் என்றும், 20 ஆயிரத்து 351 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டுக்குப் பிறகு ஜப்பான், ஜெர்மனி, தென் கொரியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் 55 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 16,359 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்ய ஒப்புகொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம் 63 ஆயிரத்து 786 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது அமெரிக்கப் பயணத்தின்போது போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, மூன்று நிறுவனங்களின் செயல்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அதேபோல் நாகை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் புதிதாக ஐடிஐ எனப்படும் தொழில்பயிற்சி மையங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.
தொழில் நிறுவனங்களில் பணிபுரிய போதிய தகுதி பெற தொழிலாளர்களுக்கு உள்ள குறைபாடுகள் குறித்து அலசும் 'திறன் குறைபாடு அறிக்கை'யை (Skill gap assessment) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதேபோல், மாவட்ட திறன் மேம்பாட்டுத் திட்டத்தையும் அவர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், Biz buddy எனப்படும் தொழில் நண்பன் இணையதளத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு தொழில் வழிகாட்டி துறைக்கான புதிய இலட்சினை (LOGO) மற்றும் இணைய தளத்தையும் அவர் நேற்று தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் கலந்து கொண்ட தொழில் துறை நிகழ்ச்சி நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "தமிழ்நாட்டிற்குத் தொழில் தொடங்க வரும் நிறுவனங்களுக்குப் போதிய திறன் படைத்த தொழிலாளர்கள் கிடைக்கும் வகையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இளைஞர்களுக்கு நிறுவனங்களின் தேவைக்கேற்ப அரசின் நிதியில் பயிற்சி அளிக்கும். உலக முதலீட்டாளர் மாநாட்டில் போடப்பட்ட பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி 53 திட்டங்கள் தற்போது உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. மேலும் 219 நிறுவனங்கள் தங்களது உற்பத்தியைத் தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளன" என்றார்.
இதையும் படிங்க:முதலமைச்சர் பழனிசாமி குறித்து ரோஜா எம்எல்ஏ கருத்து!