தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 7, 2021, 11:55 AM IST

ETV Bharat / state

நடிகை சித்ரா தற்கொலை வழக்கு - பிணை கோரி ஹேம்நாத் மனு தாக்கல்

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத், பிணை கோரி தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க, காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா
சின்னத்திரை நடிகை சித்ரா

சென்னை:சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த டிசம்பர் ஒன்பதாம் தேதி தனியார் தங்கும் விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த நசரத்பேட்டை காவல் ஆய்வாளர், சித்ராவின் கணவர் ஹேம்நாத் மற்றும் அவரது உறவினர்களிடம் நடத்திய விசாரணைக்குப் பின், தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத்தை கைது செய்தார்.

இந்நிலையில், தனக்கு பிணை வழங்கக் கோரி ஹேம்நாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கக்கூடாது என, தான் வற்புறுத்தியதாகவும், சித்ராவின் நடத்தை மீது சந்தேகம் கொண்டதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினர் தனக்கு எதிராக கூறும் குற்றச்சாட்டுகள் பொய்யானது என அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த மனுவில், " கடந்த ஆகஸ்ட் மாதம் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். என்னுடனும், எனது குடும்பத்தினருடனும் சித்ரா அன்போடு பழகியதை அவரது தாய் விரும்பவில்லை. எனக்கும், சித்ராவுக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.எனவே நான் எந்த குற்றமும் செய்யாததால் எனக்கு பிணை வழங்க வேண்டும்" என கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கில் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது வழக்கின் விசாரணை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதால், பதிலளிக்க இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேசமயம், அவருக்கு பிணை வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக சித்ராவின் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவினரை எதிர்மனுதாரராக சேர்க்க மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய காவல் துறைக்கும் உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக வரும் 18ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய கங்குலி

ABOUT THE AUTHOR

...view details