தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஆளும் துணிவற்ற அரசிடமிருந்து மக்களை மீட்போம்' - சூளுரைத்த கே.எஸ். அழகிரி

சென்னை: பாஜக அரசின் பழிவாங்கும் போக்கிலிருந்து மக்களைப் பாதுகாக்க, தமிழ்நாட்டில் ஆளும் துணிவற்ற அதிமுக அரசிடமிருந்து மக்களை மீட்க வருகிற சட்டப்பேரவைத் தேர்தல் 2021 உரிய வாய்ப்பாக அமையப் போகிறது எனத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

கே.எஸ். அழகிரி
கே.எஸ். அழகிரி

By

Published : Dec 18, 2020, 12:38 PM IST

Updated : Dec 18, 2020, 12:53 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் சமீபத்தில் வீசிய 'நிவர்' புயலாலும், 'புரெவி' புயலாலும் 41 ஆயிரத்து 262 ஏக்கர் நிலத்தில் விவசாயம், தோட்டக்கலை பயிர்கள் சேதமடைந்து விவசாயிகளைப் பாதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசும் குழுவை அனுப்பி பாதிக்கப்பட்ட இடங்களை இரண்டு குழுக்களாகப் பிரிந்து சென்று பார்வையிட்டு தமிழ்நாடு அரசு அலுவலர்களுடன் சேர்ந்து கண்துடைப்பு நாடகம் நடத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து ரூபாய் 3 ஆயிரத்து 758 கோடி நிதியுதவி மத்திய அரசிடம் கேட்டிருக்கிறது.

பேரிடர் மீட்பு நிதி

நிவர் புயல் பாதிப்புகள்

மாநில பேரிடர் மீட்பு நிதி 75:25 விகிதத்தில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு உள்ளது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த நிதியில் தற்போது ரூபாய் 538 கோடி பற்றாக்குறை நிலையில் உள்ளது. அரசு கஜானாவிலும் பணம் இல்லை. பேரிடர் மீட்பு நிதியிலும் பணம் இல்லை.

மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம்

ஆனால், இயற்கை சீற்றத்தினாலும், வறட்சியினாலும் தமிழ்நாடு பாதிக்கப்படும் போதெல்லாம் மத்திய பாஜக அரசிடம் தமிழ்நாடு அரசு நிதி கேட்பது தொடர்கதையாக நடந்துவருகிறது. ஆனால், மாநில அரசு கேட்ட தொகைக்கும், மத்திய அரசு வழங்கிய நிதியையும் ஒப்பிட்டால் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம்தான் தெரிகிறது.

தமிழ்நாடு அரசு கேட்டதும்-கிடைத்ததும்

ஜெயலலிதா மோடி

2011-12 ஆண்டில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, ‘தானே’ புயல் சேதத்திற்காக பிரதமர் மோடியிடம் கேட்டது ரூ.5,249 கோடி. ஆனால், மத்திய அரசு வழங்கியதோ ரூ.500 கோடி. டிசம்பர், 2015 சென்னை வெள்ளப்பெருக்கின் போது கேட்ட தொகை ரூ.25,912 கோடி. ஆனால், கொடுத்ததோ ரூ.1,940 கோடி. 2016-17 இல் ‘வர்தா’ புயல் சேதத்திற்குத் தமிழ்நாடு அரசு கேட்டது ரூ.22,573 கோடி.

ஆனால் மத்திய அரசு வழங்கியதோ ரூ.266 கோடி. 2017 வறட்சியின் போது கேட்ட தொகை ரூ.39,565 கோடி. ஆனால், கொடுத்ததோ ரூ.1,793 கோடி. 2017-18 இல் ‘ஒக்கி’ புயல் சேதத்திற்குக் கேட்டது ரூ.9,302 கோடி. மத்திய அரசு வழங்கியதோ ரூ.133 கோடி. 2018-19 இல் ‘கஜா’ புயல் சேதத்திற்கு தமிழ்நாடு அரசு கேட்டது ரூ.17,899 கோடி.

மத்திய அரசு வழங்கியதோ ரூ.1,146 கோடி. கடந்த காலங்களில் தமிழ்நாடு அரசு மத்திய பா.ஜ.க. அரசிடம் கேட்ட மொத்த நிவாரணத் தொகை ரூ.1,20,500 கோடி. ஆனால், பாஜக. அரசு 6 கட்டங்களாக வழங்கியதோ ரூ.5,778 கோடி. கேட்ட தொகையில் 5 சதவிகிதத்திற்கும் குறைவாகவே நிவாரண நிதி வழங்கப்பட்டிருக்கிறது. இதுதான் பிரதமர் மோடியின் கூட்டுறவு கூட்டாட்சி.

தமிழ்நாடு மீது பாரபட்சம் ஏன்?

தமிழ்நாடு அரசு கேட்ட நிவாரணத் தொகையையும், மத்திய அரசு வழங்கிய தொகையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஏணி வைத்தால் கூட எட்டாது. பாஜக அரசின் அலட்சியப் போக்கிற்கு என்ன காரணம்? தமிழ்நாடு அரசைத் துச்சமென மதிப்பது ஏன்? தமிழ்நாடு மக்கள் மீது பாரபட்சம் காட்டுவது ஏன்?

எடப்பாடி அரசிடம் எதிர்பார்க்க முடியாது

ஓபிஎஸ்-இபிஎஸ்

தமிழ்நாடு பாஜகவின் எதிர்ப்பு பூமியாக இருப்பதால் 7 கோடி தமிழ்நாடு மக்களையும் பிரதமர் மோடி வஞ்சித்து வருகிறார். கடந்த 2019 மக்களவை தேர்தலில் மோடிக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டினார்கள். பாஜக அரசால் தமிழ்நாடு தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த துணிவற்ற அரசாக எடப்பாடி அரசு திகழ்ந்துவருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் விசாரணை வளையங்களில் சிக்கி மடியில் கனத்துடன் இருப்பதால் மோடி அரசைத் தட்டிக் கேட்கிற துணிவை எடப்பாடி அரசிடம் எதிர்பார்க்க முடியாது.

திமுக - காங்கிரஸ் ஒரே நோக்கம்

திமுக - காங்கிரஸ் ஒரே நோக்கம்

எனவே, மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் போக்கிலிருந்து மக்களைப் பாதுகாக்க, தமிழ்நாட்டில் ஆளும் துணிவற்ற அரசிடம் இருந்து மக்களை மீட்க வருகிற சட்டமன்ற தேர்தல் உரிய வாய்ப்பாக அமையப் போகிறது. அந்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்தி ஆட்சி மாற்றத்தை உருவாக்குகிற வகையில் பாஜக அரசின் வஞ்சக அரசியலைத் தமிழ்நாடு மக்களிடம் தோலுரித்துக் காட்டுவதே திமுக - காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் ஒரே நோக்கமாக இருக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Last Updated : Dec 18, 2020, 12:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details