சென்னை:6வது கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டுப் போட்டிகள் தமிழகத்தின் சென்னை, கோவை, திருச்சி, மதுரை மாவட்டங்களில் ஜன.19 முதல் ஜன.31 வரை நடைபெறவுள்ளன. இதன் தொடக்க விழா சென்னை, ஜவஹா்லால் நேரு விளையாட்டு அரங்கில் ஜனவரி 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதனை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைக்கிறார். மேலும், இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உட்பட பலர் பங்கேற்க உள்ளனர். இந்த கேலோ இந்தியா போட்டியானது, தமிழகத்தில், சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடைபெற உள்ளது.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து, 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சுமார் 6000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகளும் 1600-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களும் பங்கேற்க உள்ளனர். மேலும், 1000-க்கும் மேற்பட்ட நடுவர்கள் மற்றும் 1200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இந்த ஆண்டு 27 பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஸ்குவாஷ் அறிமுக விளையாட்டாக இடம் பெறுகிறது. இதில் தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் டெமோ விளையாட்டாக இடம் பெற உள்ளது. இந்த போட்டிக்காக தமிழக விளையாட்டு மேம்பாட்டு வாரியம் முழு வீச்சில் பணிகளை மேற்கொண்டு வருகிறது.