தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 3, 2020, 8:04 PM IST

ETV Bharat / state

கறுப்பர் கூட்டத்தைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர், வீடியோ எடிட்டருக்கு நிபந்தனை பிணை!

சென்னை : கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி காணொலி வெளியிட்ட கறுப்பர் கூட்டத்தைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் சோமசுந்தரம்,வீடியோ எடிட்டர் குகனுக்கு நிபந்தனை பிணை வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Karuppar kootam
Karuppar kootam

கந்த சஷ்டி கவசம் தொடர்பாக கறுப்பர் கூட்டம் என்ற யூ-ட்யூப் சேனலில் காணொலி ஒன்று வெளியானது. இந்த காணொலி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, காணொலி வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக மற்றும் இந்து மக்கள் கட்சியினர் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக சேனலின் நிர்வாகி செந்தில் வாசன், தொகுப்பாளர் சுரேந்திரன், ஒளிப்பதிவாளர் சோமசுந்தரம், வீடியோ எடிட்டர் குகன் ஆகியோரைக் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தது, காவல் துறை.

இந்நிலையில், தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை, தங்களை காவல் துறையினர் தவறாக கைது செய்து விட்டனர் என சோமசுந்தரம், குகன் ஆகியோர் பிணை வழங்கக் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி ரோசிலின் துரை முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தீபிகா, 'மனுதாரர்கள் இருவரும் அந்த சேனலின் உரிமையாளர் கிடையாது. அந்த காணொலியின் கருத்தும் அவர்களது கிடையாது. சம்பளத்துக்கு தான் வேலை செய்து வந்துள்ளனர். மேலும், இவர்களது வருமானத்தில் தான் குடும்பம் நடந்து வந்துள்ளது. எனவே பிணை வழங்க வேண்டும்' என்று வாதிட்டனர்.

வாதத்தைக் கேட்ட நீதிபதி ஐந்து ஆயிரம் ரூபாய் பிணைத் தொகை செலுத்த வேண்டும், காவல் துறை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும், தலைமறைவாகக்கூடாது, சாட்சிகளை கலைக்கக் கூடாது என்ற நிபந்தனை அடிப்படையில் இருவருக்கும் பிணை வழங்கி உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details