மகாத்மா காந்தி பிறந்தநாள், சுதந்திர தினம், குடியரசு தினம், உழைப்பாளர் தினம் ஆகிய தினங்களில் கிராமசபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கரோனா காரணமாக தமிழ்நாடு அரசு அக்கூட்டத்தை ரத்து செய்திருந்தது.
இதனையடுத்து திமுக சார்பிலும், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பிலும் இதுதொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டன. மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டது. அதேபோல், திமுக சார்பிலும் மக்கள் கிராமசபை கூட்டமும் நடந்தது.
இச்சூழலில், குடியரசு தினமான இன்று கரோனா தொற்றை காரணம் காட்டி கிராமசபை கூட்டத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்து நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கிராம சபை கூட்டங்கள் நடத்தக்கூடாது என்று அறிவித்திருக்கிறது தமிழக அரசு. கோவிட் காரணம் காட்டியிருக்கிறது. குடியரசு நாள் கொண்டாடலாம், ஜெயலலிதா விழா நடத்தலாம், கிராம சபை மட்டும் கூடாதா? உண்மையில் இந்த அரசு யாருக்கு பயப்படுகிறது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் மற்றொரு ட்வீட்டில், நாட்டு வளர்ச்சியில் மக்களின் பங்கு என்ன? அது, தேர்தல் வந்தால் ஓட்டுப் போடுவது என்று சுருங்கிவிட்டது. தங்களுக்கு வேண்டியதைப் பெறவும், வேண்டாததைத் தவிர்க்கவும் மக்களுக்கு இருக்கும் உரிமையைச் செயல்படுத்தும் பாதையில் நகர்வோம். குடியரசு நாள் வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.