சென்னை: தமிழ்நாட்டில் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பரப்புரையில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் இன்று (பிப்.6) மக்கள் நீதி மய்யத்தின் அனைத்து வேட்பாளர்களையும் ஆதரிக்கும் விதமாக, கமல்ஹாசனும் பரப்புரையில் ஈடுபட்டார்.
பிரசுரங்கள் விநியோகித்த கமல்
முதற்கட்டமாக மந்தைவெளியில் உள்ள விசாலாட்சி தோட்டத்தில் 123ஆவது வார்டு மநீம வேட்பாளர் மாலாவை ஆதரித்து, டார்ச் லைட் சின்னத்தை காண்பித்து கமல்ஹாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அத்துடன் தங்களது தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய பிரசுரங்களையும் மக்களிடத்தில் அவர் விநியோகித்தார்.
அப்பகுதி பொதுமக்கள் கமல்ஹாசனை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அதன் பின்னர் மநீம கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
'காக்கா ஸ்டோரி...'
நிகழ்ச்சியில் மேடையில் பேசிய கமல்ஹாசன், "40 ஆண்டுகளாக அறிவுரை சொல்கிறோம். உங்களுக்கு எனது அறிவுரையை விட, அருகில் உள்ளவர்கள் எல்லாம் நேர்மை குறித்து எதிராகப் பேசுவார்கள். அதற்காக நீங்கள் வரவில்லை. ஏழ்மையைத் தீர்க்க வேண்டும். பெண்கள் பகுதி நேர அரசியலுக்கு வந்தாலே, நாடு முழு நேரமும் நன்றாகிவிடும்.
தேர்தலில் போட்டியிடுவதால் உங்களை மிரட்டும் ரவுடிகள் கூட்டம் பெரிது தான். அது கூட்டம் மட்டுமே. ஆனால், இது சங்கமம். விண்வெளிக்கு ராக்கெட் விடும் அரசு, மலம் அள்ளும் என் தம்பிக்கு ஒரு இயந்திரம் கண்டுபிடிக்க முடியாதா?. ஒரு ரூபாய் சம்பளம் என்று கூறிவிட்டு, ஊரை கொள்ளையடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை.