தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 12, 2020, 7:14 PM IST

ETV Bharat / state

பத்திரிகையாளர் வி.அன்பழகன் பொய் வழக்கில் கைது- சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்...

சென்னை: பொய் புகாரால் மூத்த பத்திரிகையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டுள்ளார் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டித்துள்ளது.

anpalagan
anpalagan

சென்னை பத்திரிக்கையாளர் மன்ற இணைச் செயலாளர் பாரதி தமிழன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"மூத்த பத்திரிகையாளரும், நமது மன்றத்தின் பொருளாளருமான அன்பழகன், மக்கள் செய்தி மையம் என்ற பதிப்பகத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார். சென்னை புத்தகக் கண்காட்சியில் அவரது பதிப்பகத்தின் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. இதில், தமிழ்நாடு அரசின் ஊழல்களை தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் நூல்களாக வெளிட்டு வருகிறார் வி.அன்பழகன்.

நேற்று (ஜனவரி 11) மக்கள் செய்தி மைய அரங்கை மூடச்சொல்லி புத்தகக் கண்காட்சியை நடத்தும் பபாசி அமைப்பினர் நெருக்கடி கொடுத்துள்ளனர். தமிழ்நாடு அரசுக்கு எதிரான புத்தகங்கள் மக்கள் செய்தி மைய அரங்கில் விற்கப்படுவதே காரணம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக் காரணத்தை எழுத்துப்பூர்வமாக கேட்டிருக்கிறார் அன்பழகன். கடிதமாக கொடுத்தவுடன் நேற்றைய தினமே அரங்கை காலி செய்திருக்கிறார்.

புத்தகக் கண்காட்சியில் அரசின் அழுத்தங்கள் காரணமாக கருத்துச் சுதந்திரத்தை மிரட்டிய பபாசியின் செயலை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டிக்கிறது. இதனைத் தொடர்ந்து பபாசியினருக்கு பத்திரிகையாளர் அன்பழகன் கொலை மிரட்டல் விடுத்ததாக பபாசி நிர்வாகிகள் மூலமாகப் பொய்ப் புகார் ஒன்றைப் பெற்றுள்ளது சென்னை மாநகர காவல்துறை.

இப்படிப்பட்ட பொய்ப் புகாரில் பிணையில் வரமுடியாத பிரிவில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை, இன்று (ஜனவரி 12) காலை ஐந்து மணியளவில் அன்பழகனை அவரது இல்லத்தில் கைது செய்திருக்கிறது.

பத்திரிகையாளர் அன்பழகன் கைதுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

இந்த பொய் வழக்கும், கைது சம்பவமும் அப்பட்டமான அத்துமீறல். தமிழ்நாடரசின் ஊழல்களை புத்தகமாக வெளியிட்டதற்காக காவல்துறை கைது செய்வது கருத்து சுதந்திரத்திற்கும், பத்திரிகை சுதந்திரத்திற்கும் விடப்பட்ட சவால். கருத்து சுதந்திரம் மீது நம்பிக்கை கொண்டோர் அனைவரும் கண்டிக்க வேண்டியது அவசியம். மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் கைதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.

ஆட்சியாளர்கள் இட்ட பணியை நிறைவேற்ற பொய் வழக்கு போட்ட காவல்துறை, பொய்ப் புகார் கொடுத்த புத்தகக் கண்காட்சி அமைப்பாளர்களை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. ஏற்கனவே பத்திதிகையாளர் அன்பழகன் மீது பல பொய் வழக்குகள் போடப்பட்டதும், குண்டர் சட்டம் ஏவப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குகள் எதிர்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

பொய் வழக்குகள் புனைந்தவர்கள் நீதியின் முன் நிச்சயமாக நின்றாக வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள பத்திரிகையாளர் அன்பழகனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details