மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன், வேதா நிலையம் இல்லத்தை, நினைவிடமாக மாற்ற ஏதுவாக சென்னை மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு சார்பில் 68 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிப்பது, அவரது வீட்டை நினைவிடமாக மாற்ற தடை கோரியது உள்ளிட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜெயலலிதாவின் 188 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமையை தீபா, தீபக் ஆகியோர் தரப்புக்கு வழங்கியதோடு, அவர்களை முதல்நிலை சட்டப்பூர்வ வாரிசுதாரர்கள் என அறிவித்தது.
அதே போல் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு முன் அரசு, தீபா, தீபக் ஆகியோரின் கருத்துக்களை கேட்டு அவர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டுமெனவும் தெரிவித்திருந்தது.
இதற்கிடையில் வழக்கு விசாரணையின்போது, வருமானவரித்துறை தரப்பு தங்களுக்கு, 36.9 கோடி ரூபாய் வரி பாக்கி இருப்பதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் நினைவில்லமாக மாற்ற ஏதுவாக, தற்போது தீபா, தீபக் ஆகியோருக்கு சேரவேண்டிய இழப்பீட்டை வழங்கும் வகையிலும், வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தும் வகையிலும் தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் 67.9 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013-யின் படி, 12 ஆயிரத்து 60 சதுரஅடி பரப்பளவு கொண்ட வேத நிலைய இல்லத்தின் கட்டட மதிப்பு 2.7 கோடி எனவும், இழப்பீடு எல்லாம் சேர்த்து தீபா, தீபக் தரப்புக்கு 29.3 கோடி ரூபாய் வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் அரசுடமையாக்கப்பட்டதால் அந்த இடம் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறைக்கு சொந்தமான இடமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்ற அமைக்கப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அடங்கிய அலுவலகம் அறக்கட்டளை பணிகளை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - ஸ்டாலின்