தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 1, 2022, 4:10 PM IST

ETV Bharat / state

ஜெயலலிதா இறப்பு வழக்கில் பல பிரச்னைகள் இருக்கின்றன - ஆணையம் குறித்துப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறப்பு குறித்த நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையில் பல பிரச்னைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன; அதை சட்டப்பேரவையில் விவாதித்து நிறைவேற்றுவோம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Etv Bharat ஸ்டாலின் பேச்சு
Etv Bharat ஸ்டாலின் பேச்சு

கோயம்புத்தூர் கொடிசியா வளாகத்தில் பர்கூர் சட்டப்பேரவை உறுப்பினர் மதியழகன் மகன் கௌசிக் தேவ்விற்கும், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி பேத்தி ஸ்ரீநிதிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்தார்.

பின்னர் திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “1972ஆம் ஆண்டு பொங்கலூர் பழனிசாமி திருமணத்தையும், 1999ஆம் ஆண்டு பொங்கலூர் பழனிசாமி மகன் பைந்தமிழ்பாரி திருமணத்தையும் கலைஞர் நடத்தி வைத்தார். கலைஞர் இருந்திருந்தால் இந்த திருமணத்தையும் நடத்தி வைத்து இருப்பார்” என்றார்.

மேலும், கட்சியில் பொங்கலூர் பழனிசாமி மற்றும் மதியழகன் ஆகியோரின் கட்சி செயல்பாடுகள் குறித்து பாராட்டு தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், இது ஒரு சீர்திருத்த திருமணமாக, சுயமரியாதை உணர்வோடு, தமிழ்த் திருமணமாக நடந்து இருக்கின்றது என்று தெரிவித்தார்.

இது போன்ற சீர்திருத்த திருமணங்கள் 1967ஆம் ஆண்டிற்கு முன்பு சட்ட உரிமையில்லை எனத் தெரிவித்த அவர், அண்ணா தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் சீர்திருத்த திருமணத்தை சட்ட அங்கீகாரமாக்கி முறைப்படி செல்லுபடியாகும் என்று கொண்டு வந்தார் என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி 6ஆவது முறையாக நடைபெற்று வருகிறது; தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகள் அத்தனையும் நிறைவேற்றவில்லை;70 விழுக்காடு நிறைவேற்றி இருக்கின்றோம்; மீதமுள்ள 30 விழுக்காட்டையும் விரைவில் நிறைவேற்றுவோம் எனத் தெரிவித்தார். மக்கள் எதிர்பார்த்து நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர் எனத் தெரிவித்த முதலமைச்சர், 4 நாள்களுக்கு முன்பு கோவை வந்தபோது மக்கள் பெரும் வரவேற்பு கொடுத்தனர் எனவும்,
மனுக்களை கொடுக்கும்போது கூட மகிழ்ச்சியோடு, பூரிப்பொடு, நம்பிக்கையோடு கொடுக்கின்றனர் என்றும்; இது தான் திராவிட மாடல் ஆட்சி என்றும் முதலமைச்சர் பூரிப்புடன் தெரிவித்தார்.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சிக்கு வந்தபோது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டோம் எனவும்; ஆட்சிக்கு வந்த 100 நாளில் தீர்க்கப்படும் என உறுதியளித்தோம் எனத் தெரிவித்த அவர் ஆட்சிக்கு வந்தவுடன் இதற்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, பெறப்பட்ட மனுக்களில் உள்ள கோரிக்கைகள் 70 விழுக்காடு நிறைவேற்றப்பட்டது எனவும் தெரிவித்தார். இதற்காக தனியாக கன்ட்ரோல் ரூம் வைத்து செயல்படுத்துகின்றோம் எனவும் கூறினார்.

மேலும், 15 நாள்களுக்கு ஒரு முறை அங்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றேன் எனத் தெரிவித்த முதலமைச்சர்,
கடந்த முறை டெலிபோன் மூலம் கோரிக்கை நிறைவேற்றப்பட்ட ஒருவரிடம் பேசிய போது, 10 ஆண்டுகளாக நடக்காத வேலை 10 நாட்களில் முடிந்துவிட்டதாக பூரிப்போடு தெரிவித்ததாகக் கூறினார்.

ஸ்டாலின் பேச்சு

234 தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்களும் அவர்கள் தொகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்து தெரிவிக்கும்படி கேட்டு இருக்கிறோம் எனவும்; அது எடப்பாடி பழனிசாமி தொகுதியாக இருந்தாலும் பிரச்னைகள் தீர்க்கப்படும் எனவும் தெரிவித்தார்.

’தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதி ஒன்று இருக்கின்றது, அது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவில் சந்தேகம் இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்த குற்றச்சாட்டு; அதை விசாரிக்க ஒப்புக்காக ஒரு கமிஷன் அமைத்தார், எடப்பாடி பழனிசாமி; திமுக ஆட்சி அமைத்தால் ஜெயலலிதா மரணம் குறித்து முறையாக விசாரித்து அறிக்கை பெற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வாக்குறுதி கொடுத்து இருந்தோம்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் அறிக்கையினை தாக்கல் செய்தது. அதில் பல பிரச்னைகள் இருக்கின்றன. அதை இப்பொது சொல்லமாட்டேன், சட்டப்பேரவையில் வெளிப்படையாக வைத்து அதில் இருக்கும் பிரச்னைகள் குறித்து வெளியில் விவாதித்து அதை நிறைவேற்றுவோம் என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும்’ தெரிவித்தார்.

இதேபோல தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அறிக்கையும் வந்திருக்கின்றது எனவும், அதையும் சட்டப்பேரவையில் வைத்து விவாதித்து முடிவு செய்ய இருக்கின்றோம் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

’தேர்தல் நேரத்தில் கொடுத்த உறுதி மொழிகள் எதையும் நிறைவேற்றவில்லை என எடப்பாடி பழனிசாமி சொல்கின்றார்; பெண்களுக்கு இலவசப் பேருந்து , பால்விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு போன்ற பல வாக்குறுதிகள் நிறைவேற்றபட்டுள்ளன. வரும் 5ஆம் தேதி டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை தமிழ்நாட்டிற்கு அழைத்து இருக்கின்றோம். மாநகராட்சிப்பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் திட்டத்தை தொடங்கி வைக்கின்றார். அன்றைய தினமே
அரசுப்பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமும் தொடங்கப்பட இருக்கின்றது’ எனத் தெரிவித்தார்.

மேலும் இன்று வரும்போது கூட சிலர் பெண்களுக்கான உரிமைத்தொகை குறித்து கேட்டார்கள்,
பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை நிதி நிலைமை சரியானவுடன் நிச்சயமாக, உறுதியாக வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த திருமண விழாவில் அமைச்சர்கள் எ.வ. வேலு, பொன்முடி, செந்தில் பலாஜி, வெள்ளகோவில் சாமிநாதன், முத்துச்சாமி, காந்த்ஜி, ராமச்சந்திரன், கயல்விழி செல்வராஜ் மற்றும் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:மக்களுக்காக தளராது பாடுபட்டவர் பூலித்தேவர்... பிரதமர் மோடி...

ABOUT THE AUTHOR

...view details