தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜெயலலிதாவின் சொத்துகள் முடக்கம்

சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் இல்லம், ஹைதராபாத் வீடு உள்ளிட்ட 4 சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக வருமானவரித் துறையின் துணை ஆணையர் ஷோபா உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

jayalalithaa

By

Published : Apr 25, 2019, 1:24 PM IST

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்கக் கோரி சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி புகழேந்தி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், ”ஜெயலலிதாவிற்கு 913 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்துகள் இருப்பதாகவும், இவற்றை யார் நிர்வகிக்க வேண்டும் என ஜெயலலிதா உயில் எழுதாததால், உயர் நீதிமன்றம் தனி நிர்வாகியை நியமிக்க வேண்டும்" என கோரியிருந்தார்.

ஏற்கனவே, இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவின் சொத்துகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருமானவரித் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், சரவணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 2016 - 2017ஆம் ஆண்டுக்கான வருமானவரித் துறை கணக்குப்படி ஜெயலலிதாவிற்கு 16.37 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளும், வங்கியில் 10 கோடி ரூபாய் இருப்பதாகவும் வருமானவரித் துறையின் துணை ஆணையர் ஷோபா சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

மேலும், 1990- 91 முதல் 2011 -12ஆம் ஆண்டுவரை 10.12 கோடி செல்வ வரி பாக்கி இருக்கிறது எனவும், 2005-06 முதல் 2011-12ஆம் ஆண்டுவரை 6.62 கோடி வருமானவரி பாக்கி உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் இல்லம், ஹைதராபாத் வீடு உள்ளிட்ட 4 சொத்துகள் முடக்கம் செய்திருப்பதாகவும் வருமானவரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, இந்த வழக்கின் இறுதி விசாரணையை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details