தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி, திராவிட சித்தாந்தத்தின் முன்னோடி, தமிழறிஞர், சித்த மருத்துவர், தமிழ்த் தேசியத் தந்தை என போற்றப்படுபவர் அயோத்திதாச பண்டிதர்.
25-க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்கள், 30 தொடர் கட்டுரைகள், 50 மேற்பட்ட விரிவுரைகள், 12 சுவடிகளுக்கு உரை இதனைத் தவிர அரசியல் கட்டுரைகள், கேள்வி பதில்கள், பகுத்தறிவுக் கட்டுரைகள் என அறிவுசார் தளத்தில் தமிழ்நாட்டின் முற்போக்கு வரலாற்றின் முகமாக விளங்கியவர்.
திராவிட இயக்கத்தின் தோற்றுவாயான திராவிட மகாஜன சபை இவரால் தொடங்கப்பட்டது. திராவிட பாண்டியன் என்னும் இதழை நடத்திய இவரே தீண்டத்தகாதவர்கள் என அழைக்கப்பட்ட யாவரும் சாதியற்ற திராவிடர்கள் என முழங்கினார். திராவிட அரசியலைத் தொடங்கி வைத்த இவரே தமிழன் என இனப்பெயரையும் தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்த்த தமிழ்த்தேசியத் தந்தையுமாவார். தந்தை பெரியாருக்கும் முன்னரே இட ஒதுக்கீடு எனும் சமூக நீதிக் கொள்கைக்காக இயக்கம் நடத்தியவர், பெரியாரின் அரசியல் முன்னோடியாக விளங்கியவர்.