சென்னை: அரசு மருத்துவர்கள் கால சட்டப் போராட்டக் குழுவின் தலைவர் பெருமாள் பிள்ளை மற்றும் செயலாளர் சையத் தாகிர் ஹூசேன் கூறியதாவது, அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு, கரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து சட்ட போராட்டக் குழு போராடி வருகிறது.
திமுக ஆட்சி அமைந்தால் தங்களுக்கு நன்மை கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் தங்களுக்கு எந்த வித நன்மையும் கிடைக்கவில்லை எனவும், எனவே மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளோம். மேலும் தங்களின் கோரிக்கையை முதலமைச்சர் நிறைவேற்றித் தருவார் என நம்புவதாகவும் தெரிவித்தனர்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு கடந்த ஏப்ரல் மே மாதம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சிறப்பு பிரிவு துறைகளில் அந்தத் துறை சார்ந்தவர்களை நியமிக்காமல் எம்பிபிஎஸ் போன்ற பட்டங்களை பெற்றவர்களை நியமித்து உள்ளனர். சிறப்பு பிரிவில் அதற்கான படிப்பை முடித்த சிறப்பு மருத்துவர்கள் நியமித்தால் மட்டுமே நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை வழங்க முடியும்.