தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 15, 2021, 5:48 PM IST

ETV Bharat / state

கரோனா நிவாரணம்: ஒன்றிய மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கரோனா தொற்று பேரிடராக அறிவிக்கப்பட்டு 487 நாள்கள் கடந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில் ஒன்றிய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Indemnities for corona victims
Indemnities for corona victims

இதுதொடர்பாக வழக்கறிஞர் விஜயகோபால் தாக்கல் செய்துள்ள மனுவில், "கடந்த ஆண்டு மார்ச் 14ஆம் தேதி கரோனா தொற்றை ஒன்றிய அரசு பேரிடராக அறிவித்தது. பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதை உறுதி செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும், மாநிலங்களில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் அமைக்கப்பட்டன. நிவாரண உதவிகளை வழங்குவதற்கான விதிமுறைகளும் வகுக்கப்பட்டன.

பேரிடர் அறிவிப்பு வெளியிட்ட 45 நாள்களுக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என விதிகளில் கூறப்பட்டுள்ளன. ஆனால், கரோனா தொற்றை பேரிடராக அறிவித்து 487 நாள்கள் கடந்த நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை அடையாளம் கண்டு, உரிய உதவிகளை வழங்கவில்லை

பேரிடர் மேலாண்மை சட்டப்படி, பேரிடரால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய், ஒரு வாரத்துக்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு 12 ஆயிரத்து 700 ரூபாய், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு 60 ரூபாய், குழந்தைகளுக்கு 45 ரூபாயை நிவாரண உதவியாக 60 நாள்கள் வரை வழங்க வேண்டும்.

வர்தா, ஒகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேரிடர் மேலாண்மை சட்டப்படி நிவாரண உதவி வழங்கிய அரசு, கரோனா தொற்றை பேரிடராக அறிவித்து 487 நாள்கள் கடந்த பின்பும், நிவாரண உதவிகள் வழங்கவில்லை. எனவே கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை அடையாளம் கண்டு, விதிகளின்படி உரிய நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு,கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, ஒன்றிய – மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.

ABOUT THE AUTHOR

...view details