சென்னை: தமிழ்நாட்டில் தற்பொழுது தமிழுக்கான அரசு நடைபெறுவதை பயன்படுத்திக் கொண்டு மருத்துவத்துறையில் தமிழ்ச் சொற்களை உருவாக்கி பயன்படுத்துவோம் என மருத்துவர் மோகன் காமேஸ்வரன் தெரிவித்தார்.
ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ்ப் பேரவை அரங்கில் தமிழ்நாடு காது, மூக்கு, தொண்டை மருத்துவ கூட்டமைப்பின் சார்பில் தமிழில் முதல் முறையாக நடத்தப்படும் "காது, மூக்கு, தொண்டை, தலை மற்றும் கழுத்து மருத்துவ அறிவியல் மாநாடு" (ENT Medical Conference in Chennai) இன்று (ஜன.29) நடந்தது. இதனைத் தொடங்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநாட்டு மலரையும் வெளியிட்டார்.
இந்த மாநாடு குறித்து காது, மூக்கு, தொண்டை மருத்துவ கூட்டமைப்பின் ஆலோசகர் மோகன் காமேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து காது மூக்கு தொண்டை நிபுணர்கள் கலந்து கொண்டுள்ளனர். முதன்முறையாக முழுவதும் தமிழில் மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற உள்ளன. மேலும் குறிப்பாக காது , மூக்கு, தொண்டை சிகிச்சை முறை அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் பேசப்பட உள்ளது.