தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2024-ம் ஆண்டில் சென்னை ஐஐடி; 100 புத்தாக்க நிறுவனங்களின் தொழில் ஊக்குவிப்பில் ஈடுபடுத்த இலக்கு!

IIT Madras: 2024-ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் 100 ஸ்டார்ட்-அப்களுக்கு தொழில் ஊக்குவிப்பு செய்வதை சென்னை ஐஐடி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது என அதன் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடியில் 100 புத்தாக்க நிறுவனங்களை தொழில் ஊக்குவிப்பில் ஈடுபடுத்த இலக்கு
சென்னை ஐஐடியில் 100 புத்தாக்க நிறுவனங்களை தொழில் ஊக்குவிப்பில் ஈடுபடுத்த இலக்கு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2024, 3:57 PM IST

சென்னை: இந்தியாவின் சிறந்த டீப்டெக் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட சென்னை ஐஐடி இன்குபேஷன் செல் (IITMIC) என்பது பல்வேறு கண்டுபிடிப்பு மற்றும் தொழில் முனைவுத் திட்டங்களை வளர்த்தெடுத்தல், ஆதரவு அளித்தல், மேற்பார்வையிடுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் அமைப்பாகும்.

இந்த நிலையில், இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி கூறும்போது, “2023-ஆம் ஆண்டில் சென்னை ஐஐடி எண்ணற்ற லட்சியங்களை அடைய முடிந்தது. கடந்த ஆண்டில் ஐஐடி சான்சிபார் வளாகம் உள்பட பல்வேறு முக்கிய திட்டப் பணிகளை மேற்கொண்டோம்.

முதன்முறையாக வெளிநாட்டில் நிறுவப்பட்ட ஐஐடியில், மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை தொடங்கப்பட்டு இருப்பதுடன், மேலும் இதே முறையில் பல்வேறு அம்சங்களை மேற்கொள்ள இருக்கிறோம். பல்துறை அறிவியலை கற்பிக்க புதிய பள்ளி ஒன்றையும் தொடங்க திட்டமிட்டிருக்கிறோம்.

தற்போது பல்துறைக் கல்வியை நோக்கி நகர்ந்து செல்வதால், இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள், அதிக எண்ணிக்கையிலான திட்டப் பணிகளை செய்து முடிக்க விரும்புகிறோம். நாட்டிற்குப் பெருமளவில் பயன் தரும் பல்வேறு உற்சாகமான முன்முயற்சிகள் மற்றும் சமூகம் சார்ந்த திட்டங்ளை 2024-ஆம் ஆண்டில் மேற்கொள்ள இருக்கிறோம். 366 காப்புரிமைகளுடன் நடப்பு நிதியாண்டை (31 மார்ச் 2024) முடிக்கவிருக்கிறோம். நாள் ஒன்றுக்கு ஒரு காப்புரிமை வீதம் கிடைக்கப்பெறுமாறு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.

சென்னை ஐஐடி புத்தாக்கங்களை அதிகளவில் செய்வது பெருமை அளிக்கிறது. 2024-இல் 100 ஸ்டார்ட்அப்களைத் தொடங்க நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். சென்னை ஐஐடி மூலம் தொழில் ஊக்குவிப்பு செய்யப்பட்ட ஹைப்பர்லூப் ஸ்டார்ட்அப், ஈபிளேன், அக்னிகுல் காஸ்மோஸ், மைன்ட்குரோவ் டெக்னாலஜிஸ் போன்ற நிறுவனங்கள் அனைத்தும் சுவாரஸ்யமான பல தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியிருப்பதைக் காண்கிறோம். இந்த ஸ்டார்ட்அப்கள் மிகப்பெரிய அளவில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தயாரிப்புகளை அளிக்கும்.

தேசிய தரக்கட்டமைப்பு நிறுவனத்தின் நம்பர்-1 என்ற தரவரிசையைத் தக்கவைக்க மிகவும் கடினமாக உழைத்து வருகிறோம். உலகத் தரவரிசையிலும், உயர் தரவரிசைக்குச் செல்ல விரும்புகிறோம். ஐஐடி சான்சிபாரில் மேலும் இரண்டு புதிய படிப்புகளைத் தொடங்க உள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.

2023-இல் சென்னை ஐஐடியின் சிறந்த வளர்ச்சிகளாக,சென்னை ஐஐடி சான்சிபார் வளாகம் முதல்முறையாக வெளிநாட்டில் வளாகத்தை தொடங்கி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக பிஎஸ், எம்டெக் ஆகிய பாடத்திட்டங்களை வழங்கி வந்தாலும், வரும் ஆண்டில் தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு ஆகிய மேலும் இரு பாடத்திட்டங்கள் சேர்க்கப்பட உள்ளன.

ஐஐடிஎம் சான்சிபாரின் முதல் பேட்சில் சான்சிபார், தான்சானியா, நேபாளம், இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 40 சதவீதம் பேர் பெண்களாவர்.

ஜி20 கருத்தரங்கு: சென்னை ஐஐடியின் ஆராய்ச்சிப் பூங்காவில் 31 ஜனவரி 2023 அன்று 'கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு' என்ற தலைப்பில் ஜி20 கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. 31 ஜனவரி 2023 முதல் 2 பிப்ரவரி 2023 வரை சென்னையில் 'ஷெர்பா டிராக் – முதலாவது கல்வி பணிக்குழுக்' கூட்டத்தின் ஒரு பகுதியாக ஜி20 கருத்தரங்கு நடைபெற்றது. ஜி20 உறுப்பு நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களிடையே சாத்தியமான ஆராய்ச்சி மற்றும் கல்வி ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பகுதிகள், கருப்பொருள்கள் குறித்து இந்தியாவின் தலைமையிலான ஜி20 கல்விப் பணிக்குழு நோக்கமாக கொண்டிருந்தது.

மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத்துறை: சென்னை ஐஐடி மே 2023-இல் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையை தொடங்கியது. இது நான்காண்டு பிஎஸ் மருத்துவ அறிவியல் மற்றும் பொறியியல் பாடத்திட்டங்களைக் கொண்டதாகும். இந்தியாவிலேயே இது போன்ற பாடத்திட்டம் தொடங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். உயிர் காக்கும் மருத்துவ சாதனங்கள், மருந்துகள் கண்டுபிடிப்பு, மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு, அடிப்படை மருத்துவ ஆராய்ச்சி ஆகியவற்றை வடிவமைப்பதற்காக மாணவர்களை தயார்படுத்தும் வகையில் பல்துறை அணுகுமுறையை இப்பாடத்திட்டம் வழங்குகிறது.

சென்னை ஐஐடி அறிமுகப்படுத்திய பள்ளி: சென்னை ஐஐடியில் அக்டோபர் 2023-இல் நிலைத்தன்மைக்காக ஒரு பள்ளியை அறிமுகப்படுத்தியது. முன்மாதிரியான பணிக்கான இக்கல்வி நிறுவனத்தின் வலிமையான பாரம்பரியத்தை ஊக்குவிக்கும் வகையில் இப்பள்ளி அமைந்துள்ளது. நிலைத்தன்மை குறித்த புதிய பல்துறை படிப்புகள் கற்பிக்கப்படுவதுடன், பெரும் சவால்களைச் சமாளிப்பதற்கான ஆராய்ச்சியையும் ஒருங்கிணைக்கும். நடைமுறைகள், கொள்கைகள் ஆகிய இரண்டையும் இயக்க உதவும். நிகழ்வுகளை நடத்தவும், தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்தவும் ஒரு தளத்தை வழங்குகிறது. உயர் சிறப்பு மையமாகத் திகழ்வதால், பல்வேறு துறைகள் மற்றும் ஆராய்ச்சி மையங்களைச் சேர்ந்த ஆசிரியர்களை இப்பள்ளி ஒருங்கிணைக்கும்.

தயாராகும் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளி:சென்னை ஐஐடியில் விரைவில் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளியைத் தொடங்க உள்ளது. இது நிறுவனத்தின் 18-வது துறையாக செயல்படும். இதன் மூலம் சிறந்த அளவில் நிலைநிறுத்தவும், தரவரிசையை மேம்படுத்தவும், சமூக தொழில்துறை, கல்வியியல் ஆராய்ச்சிக்கான பயன்பாடுகளுடன் தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் உலகளாவிய தேசிய தெரிவு நிலையை மேம்படுத்தவும் இக்கல்வி நிறுவனம் விரும்புகிறது.

தேசிய தரவரிசைப் பட்டியலில் 2019ஆம் ஆண்டில் தனிச்சிறப்பு கல்வி நிறுவனமாக (IOE) அங்கீகரிக்கப்பட்ட சென்னை ஐஐடி கல்வி அமைச்சகம், 2023ஆம் ஆண்டுக்கான இந்திய தரவரிசையில் ஐந்தாவது ஆண்டாக 'ஒட்டுமொத்த' பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2016 முதல் 2023-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 8 ஆண்டுகளாக இதே தரவரிசையில் 'பொறியியல் கல்வி நிறுவனங்கள்' பெயரில் இக்கல்வி நிறுவனம் நம்பர்-1 இடத்தில் நீடித்து வருகிறது.

பிஎஸ் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ்-ல் நான்காண்ட ஆன்லைன் இளங்கலை அறிவியல் (பிஎஸ்) பாடத்தைத் தொடங்கியது. இந்தியாவில் எலக்ட்ரிக்கல் மற்றும் உட்பொதிக்கப்பட்ட உற்பத்தித் துறையில் திறமையான பட்டதாரிகளுக்கான குறிப்பிடத்தக்க மற்றும் வளர்ந்துவரும் தேவையைப் பூர்த்தி செய்வதே இதன் முக்கிய நோக்கம். பலமுறை வெளியேற்ற வாய்ப்புகளையும் இப்பாடத்திட்டம் அளித்துள்ளது. மாணவர்கள் ஒரு அடிப்படை நிலை சான்றிதழ், டிப்ளமோ அல்லது பிஎஸ் பட்டம் பெற முடியும்.

உலகளாவிய மின்னணுவியல் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு மையமாக இந்தியாவை மாற்றும் வகையில் 'இந்தியா செமிகண்டக்டர் மிஷனுடன்' இத்திட்டம் இணைந்து செயல்படுகிறது. தற்போது 17ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் தரவு அறிவியல் மற்றும் பயன்பாடுகளில், பிஎஸ் பட்டப்படிப்பைத் தொடர்ந்து வழங்கும் இரண்டாவது ஆன்லைன் பிஎஸ் பாடத்திட்டம் இதுவாகும்.

உச்ச நீதிமன்றத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு பயன்பாடு, மொழிபெயர்ப்பு கருவிகளுக்கான தொழில்நுட்பங்களை இணைந்து செயல்படுத்த உச்ச நீதிமன்றம் சென்னை ஐஐடி உடன் அக்டோபர் 2023-இல் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. அதன்படி, வார்த்தைகளை பக்க அளவில் சுருக்குதல், மொழிபெயர்ப்புக் கருவி, நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகள், தானியங்கி செயல்முறை, பெரிய மொழி மாதிரிகள் ஆகியவற்றுக்கான பிரத்யேக ஸ்ட்ரீமிங் தளம் ஆகியவை செயல்படுத்தப்படும்.

இவை அனைத்தும் கடந்த ஆண்டு ஜுலை மாதம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் வருகைக்குப்பின் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும். இந்திய நீதித்துறையின் டிஜிட்டல் மாற்றத்தை எளிதாக்குவதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும். தவிர, நீதிக்கான அணுகுமுறையை மேம்படுத்துவதற்கு மிகவும் திறமையான, தொழில்நுட்ப ரீதியான மேம்பட்ட சட்ட சுற்றுச்சூழலை ஏற்படுத்தவும் இப்புரிந்துணர்வு வகைசெய்கிறது.

மொபைல் இயக்க முறைமை: சென்னை ஐஐடியின் தொழில் ஊக்குவிப்பு நிறுவனமான ஜண்ட்காப்ஸ் (JandKOps) இந்தியாவின் 100 கோடி மொபைல் பயனர்களுக்கு உதவும் உள்நாட்டு மொபைல் இயக்க முறைமையை (Operating System) உருவாக்கியது. 'பரோஸ்'(BharOS) என்றழைக்கப்படும் இந்த மென்பொருளை, வணிக ரீதியான ஆஃப்-தி-ஷெல்ஃப் செல்பேசிகளில் நிறுவலாம். பயனர்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்குவதுடன், நாட்டின் இலக்கான 'ஆத்மநிர்பர் பாரத்'க்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் அது வழங்கும். கடுமையான தனியுரிமை, பாதுகாப்புத் தேவைகள் மற்றும் மொபைல்களில் தடை செய்யப்பட்ட பயன்பாடுகளில் ரகசியத் தகவல் போன்ற தொடர்புகள் தேவைப்படும் முக்கிய தகவல்கள் குறித்து பயனர்களைக் கையாளும்.

நிறுவனங்களுக்கு 'பரோஸ்' சேவைகள் வழங்குகின்றன. சில பயனர்கள் தனிப்பட்ட 5ஜி நெட்வொர்க்குகள் மூலம் அத்தகைய தனியார் கிளவுட் சேவைகளை அணுக வேண்டியிருக்கும். இது இந்தியாவின் கல்வித்துறையில் இருந்து மிகப்பெரிய தொழில்நுட்ப பரிமாற்றங்களுக்கான ஒப்பந்தமாகும். பல்வேறு நிறுவனக் குழுக்களால் உருவாக்கப்பட்ட 5ஜி ரான் (Radio Access Network) தொழில்நுட்பம் தொழில் கூட்டாண்மை நிறுவனமான தேஜாஸ் நெட்வொர்க் (டாடா குழும நிறுவனம்) நிறுவனத்திற்கு ரூ.1கோடிக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

இஸ்ரோவிலும் சென்னை ஐஐடி மாணவர்களின் பங்களிப்பு: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்களில் 12 பேர் இடம்பெற்று, வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரயான்- 3 பணியில் முக்கிய பங்காற்றினர். முதன்மையான 'அனைவருக்கும் ஐஐடிஎம்' திட்டத்தின் கீழ் ஐஐடி மெட்ராஸ் பிஎஸ் (டேட்டா சயின்ஸ் அண்ட் புரோகிராமிங்) பட்டப் படிப்பில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஒரு லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மின்னணுக் கருவிகளை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

அறிமுகமாகும் VR கல்வி: சென்னை ஐஐடியின் பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளை, உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமப்புற மக்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மற்றும் விர்ச்சுவடல் ரியாலிட்டி (virtual reality - VR) மூலம் கல்வியைக் கொண்டு செல்ல 'வித்யா சக்தி' என்ற அமைப்புடன் கூட்டு சேர்ந்துள்ளது. வாரணாசி மாவட்டத்தின் 100 கிராமங்களில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியில் ஏற்கனவே அமர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நகர்ப்புற மற்றும் கிராமப்புற மாணவர்களிடையே கரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட அறிவு இடைவெளியை சமாளிக்கும் நோக்கத்துடன் இந்த மாதிரியான முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு தொழில்நுட்பங்கள் வாயிலாக மொழிகளின் அடிப்படைகள், கணிதம், அறிவியல் ஆகியவற்றில் மாணவர்களின் தக்கவைப்பு நிலை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுவரை 25 கோடி பயணிகள் பயணம்!

ABOUT THE AUTHOR

...view details