தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை ஐஐடியில் எம்டி - பிஎச்டி இரட்டைப் பட்டம்!

Madras IIT Dual Degree: சென்னை ஐஐடி, ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து எம்டி - பிஎச்டி இரட்டைப் பட்டப்படிப்பு (MD - PhD Dual Degree) பாடத்திட்டத்தை வழங்க உள்ளது.

ஐஐடி மெட்ராஸ் - எஸ்ஆர்ஐஎச்இஆர் இணைந்து இரட்டைப் பட்டப்படிப்பை வழங்க உள்ளது
ஐஐடி மெட்ராஸ் - எஸ்ஆர்ஐஎச்இஆர் இணைந்து இரட்டைப் பட்டப்படிப்பை வழங்க உள்ளது

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2023, 6:08 PM IST

சென்னை:சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக்கழகம், ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து எம்டி - பிஎச்டி இரட்டைப் பட்டப்படிப்பு (MD - PhD Dual Degree) பாடத்திட்டத்தை வழங்க உள்ளது. இதன்மூலம் ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால் முதுகலை மருத்துவப் பட்டமும், சென்னை ஐஐடியால் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் (Department of Medical Sciences and Technology) பி.எச்.டி பட்டமும் வழங்கப்படும்.

ஒருங்கிணைந்த மருத்துவ - பல்துறை சார்ந்த மற்றும் பயனளிக்கக்கூடிய ஆராய்ச்சியில் இந்த கூட்டு முயற்சி கவனம் செலுத்தும். இந்த இரட்டைப் பட்டப்படிப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஸ்ரீ ராமச்சந்திரா
உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைவேந்தர் உமா சேகர், சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி ஆகியோர் இன்று (நவ.16) கையெழுத்திட்டனர்.

இதில் சென்னை ஐஐடி மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறைத் தலைவர் போபி ஜார்ஜ், கல்விநிறுவனப் பேராசிரியர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இது குறித்து சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி கூறும்போது, “இந்த உலகிற்கு மருத்துவத் தொழில்நுட்பம் அவசியம். தொழில்நுட்ப உலகை ஆராய கணினித்துறையில் திறமை மிகுந்த மருத்துவர்கள் அதற்கு தேவைப்படுகின்றனர்.

இத்தேவையை செயல்படுத்துவதன் தொடக்கமாக சென்னை ஐஐடி மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இடையே எம்டி - பிஎச்டி பாடத்திட்டம் திட்டமிடப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. நாட்டிற்கு மிகப்பெரிய அளவில், அணுகக்கூடிய, குறைந்த செவிலான, தரமான சுகாதார சேவைக்கு வழிவகுப்பதுடன், இந்த கூட்டுமுயற்சி மிகவும் சுவாரஸ்யமான பல கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என நம்புகிறேன்.

சென்னை ஐஐடி 2023 மே மாதம் தொடங்கிய மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, நான்காண்டு பி.எஸ் மருத்துவ அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பை வழங்குகிறது. இதுபோன்ற பாடத்திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாகும்” என தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத் துணைவேந்தர் உமா சேகர் கூறும்போது, “உயிரி மருத்துவப் பணியில் இத்தகைய மருத்துவர் - விஞ்ஞானிகள் தற்போது 2 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளனர். மருத்துவர் - விஞ்ஞானிகள் என்ற முறையில், அவர்கள் குறிப்பாக உற்பத்தி சார்ந்த கல்வி ஆராய்ச்சியில் ஈடுபடுவார்கள்.

அத்துடன் உயிரியல் மருத்துவ கண்டுபிடிப்புகளுக்கும் பங்களிப்பை வழங்க அவர்களால் முடியும். உயிர்காக்கும் சிகிச்சைகளைக் கண்டறிவதுடன், நோய் தடுப்பிற்கான உத்திகளை உருவாக்கும் திறனையும் அவர்கள் பெற்றிருக்கின்றனர். மருத்துவர் - விஞ்ஞானி ஒருவரின் மனித ஆரோக்கியம் - நோய் தொடர்பான ஆழ்ந்த மருத்துவ அறிவு, அறிவியல் ஆய்வு, பகுப்பாய்வு ஆகிய திறன்களுடன் இணைந்து, அவர்களை தனித்துவமிக்கவர்களாக உயர்த்துகிறது.

மனிதர்களின் ஆரோக்கியத்தில் கணிசமான தாக்கத்துடன் மருத்துவத் திறனை மேம்படுத்துவதில் அவர்கள் முக்கிய பங்களிப்பை வழங்குவார்கள். எம்டி அல்லது எம்எஸ் படித்த முதுகலைப் பட்டதாரிகள், தற்போதுள்ள ஐசிஎம்ஆர் எம்டி பிஎச்டி படிப்பைத் தேர்வு செய்தாலும், அதில் உயிரிமருத்துவப் பொறியியல் வழிகாட்டல் இல்லாததால், அந்த ஆராய்ச்சியின் பலன்கள் நோயாளிகளின் படுக்கை வரை சென்றடைவதில்லை.

இரட்டைப் பட்டப்படிப்பிற்காக சென்னை ஐஐடி உடன் இணைந்திருப்பதன் மூலம் ஆராய்ச்சி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு பயன்பாட்டில் ஆக்கப்பூர்வமான விளைவுகள் ஏற்படும். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும், நிர்வாகத்திலும் ஏற்கனவே ஈடுபட்டிருப்பதால் புதுமையான, பொருந்தக்கூடிய, நல்வாழ்வை மேம்படுத்தும் தயாரிப்புகளின் தேவையை அவர்களால் புரிந்துகொள்ள முடியும்.

‘மருத்துவர் - விஞ்ஞானிகள்’ என்று அழைக்கப்படும் எம்டி - பிஎச்டி பட்டதாரிகள் எண்ணிக்கையில் மிகக் குறைவானவர்களே. இருப்பினும், உடலியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்களில் குறிப்பிடத்தக்க அளவாக 37 சதவீத அளவுக்கு இவர்களுக்குத்தான் வழங்கப்பட்டு உள்ளது. புகைபிடித்தலுக்கும் புற்றுநோய்க்கும், அதேபோன்று சர்க்கரைக்கும் நீரிழிவு நோய்க்கும் உள்ள தொடர்புகளை, அவற்றுக்கான காரணங்கள் மற்றும் விளைவுகளோடு நிரூபித்துள்ளனர்.

ஆபத்து மிகுந்த, ஒவ்வொரு சாத்தியமான முன்னேற்றத்தை முன்வைக்கும் வடிவங்களைக் கவனிக்கவும், நிறுவப்பட்ட நம்பிக்கைகளில் உள்ள சவால்களை சந்திக்கவும், அவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். ஆய்வகம், மருத்துவமனை, சமூகம், மக்கள்தொகை ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் அவர்கள் ஆராய்ச்சியை மேற்கொள்கின்றனர்.

இந்தியாவில் அதிகமான அளவில் இத்தகைய விஞ்ஞானிகள் தேவைப்படுகின்றனர். நன்கு பயிற்சி பெற்ற ஆராய்ச்சி விஞ்ஞானிகளை உருவாக்கி, மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையில் இந்தியாவை தன்னிறைவுக்கு முன்னெடுத்துச் செல்வது எம்டி - பிஎச்டி இரட்டைப் பட்டப்படிப்புத் திட்டத்தின் நோக்கமாகும். அடுத்த கல்வியாண்டு முதல் இந்த பாடத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்.

நீட் தேர்வின் மூலம் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்ட முதுகலைப் பட்டதாரிகள், பிஎச்டி படிக்க விரும்பினால், அவர்கள் இரண்டாமாண்டு இறுதியில் சென்னை ஐஐடியின் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு பிஎச்டி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

பிஎச்டி பாடத்திட்டத்திற்கான விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்க, மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையானது நிறுவப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றும். பிஎச்டி திட்டத்தில் சேர்க்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஆசிரிய உறுப்பினர் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இணை வழிகாட்டி ஆகியோரால் கூட்டாக வழி நடத்தப்படுவார்கள்.

உயிர்காக்கும் மருத்துவ சாதனங்கள், மருந்துகள் கண்டுபிடிப்பு, மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு, அடிப்படை மருத்துவ ஆராய்ச்சி ஆகியவற்றை வடிவமைப்பதற்காக மாணவர்களைத் தயார்படுத்துவதற்கு, ஒரு பல்துறை அணுகுமுறையை சென்னை ஐஐடி மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை வழங்குகிறது.

மருத்துவர்கள் தங்கள் மருத்துவ நடைமுறையில் தொழில்நுட்பத்தை திறம்படப் பயன்படுத்தும் வகையில் பயிற்சியளித்து, அதன் மூலம் இந்தியாவில் மருத்துவர் - விஞ்ஞானிகள் பயிற்சிக்கான அடித்தளத்தை இத்துறை உருவாக்கும். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள உயர்நிலை மருத்துவத்தை அளிக்கும் மருத்துவர்கள், இப்பாடத்திட்ட மேம்பாட்டில் நெருக்கமாக ஈடுபடும் வகையில், இந்த துறையின் ‘நடைமுறைப் பேராசிரியர்களாக’
செயல்படுவார்கள்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:விளக்கம் கேட்டு மசோதாக்களைத் திருப்பி அனுப்பிய ஆளுநர்..! சிறப்புச் சட்டமன்றத்தைக் கூட்டத் தமிழக அரசுத் திட்டம்!

ABOUT THE AUTHOR

...view details