சென்னை ஐஐடியின் விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுக்கான தனிச்சிறப்பு மையம் பல பதிப்புகளைக் கொண்ட 'ஸ்மார்ட்பாக்சர்' என்ற பகுப்பாய்வு மென்பொருளை உருவாக்கி உள்ளது. அணியக்கூடிய சென்சார்கள் மற்றும் வீடியோ கேமராக்களைப் பயன்படுத்தி இண்டர்நெட்-ஆஃப்-திங்ஸ் மூலம் பின்னூட்டம் மற்றும் செயல்திறன் மதிப்பீடுகளை இந்த பகுப்பாய்வுத் தளம் வழங்கும். இந்திய விளையாட்டு வீரர்களின் போட்டித் திறனை மேம்படுத்த இது உதவும்.
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் அமைந்துள்ள இன்ஸ்பயர் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் 'ஸ்மார்ட்பாக்சர்' பயன்படுத்தப்பட்டு, குத்துச்சண்டை வீரர்களின் செயல்திறன் ஆய்வு செய்யப்படும். ஐஐஎஸ்-ல் இருந்து பெறப்படும் பின்னூட்டத்தின் அடிப்படையில், 'ஸ்மார்ட்பாக்சர்' பகுப்பாய்வுத் தளத்தில் மாற்றங்கள் இணைக்கப்படும். இதன்மூலம் பயிற்சியாளர்கள் மற்றும் குத்துச்சண்டை வீரர்களுக்கு உதவிடும் வகையில் இந்த மென்பொருளை திறம்படப் பயன்படுத்த முடியும்.
விளையாட்டுப் பொறியியல் என்ற ஒப்பீட்டு அளவிலான புதிய துறைக்கு கணிதம், இயற்பியல், செயற்கை நுண்ணறிவு, இண்டர்நெட்- ஆஃப்-திங்ஸ் தொடர்புடன் அணியும் பொருட்கள் ஆகியவை இடைநிலைக் களமாக பயன்படுத்தப்படும். உடலியல், உயிர்இயக்கவியல் போன்ற விளையாட்டுடன் தொடர்பு உடையவற்றைப் புரிந்துகொள்ள விளையாட்டுப் பொறியியல் உதவிகரமாக இருக்கும். அத்துடன், விளையாடுவதில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்கவும், விளையாட்டு சாதனங்களை நன்கு வடிவமைக்கவும் இது உதவும்.
ஒலிம்பிக் பதக்கங்களை அதிகரித்தல்:
2024 ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை அதிகரிக்க வேண்டும் என்ற லட்சிய இலக்கை எட்டிப் பிடிக்க, வில்வித்தை, குத்துச்சண்டை, பேட்மிண்டன், மல்யுத்தம், ஹாக்கி, பளுதூக்குதல், சைக்கிள் பந்தயம், தடகளம் போன்ற விளையாட்டுகளில் இந்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.