சென்னை மாங்காட்டைச் சேர்ந்த 28 வயது பெண், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தன்னுடைய பிரசவத்திற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை மேற்கொண்ட போது ரத்தம் குறைவாக இருந்ததால் ரத்தம் ஏற்றி கொண்டதாகவும், தொடர்ந்து குழந்தை பெறுவதற்கு முன்னதாக ரத்த பரிசோதனை செய்த போது, தனக்கு ஹெச்.ஐ.வி நோய் தொற்று இருப்பதாக மருத்துவர்கள் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றிய போது தான், தனக்கு ஹெச்.ஐ.வி நோய் தொற்று ஏற்பட்டதாகவும், அதற்கு தனக்கு உரிய நஷ்டஈடு வழங்குவதோடு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் மீது உரிய நடவடிக்கை வேண்டுமென அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அரசு மருத்துவமனை ரத்தத்தால் ஹெச்.ஐ.வி பரவியதாக வழக்கு: தள்ளுபடி செய்த நீதிமன்றம்!
சென்னை : கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றியதால் தனக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டதாக கூறி, இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆதிகேசவலு முன்பு நடைபெற்றது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் குமார், மனுதாரரின் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டு விரிவாக விசாரணை மேற்கொள்ளப் பட்டதாகவும், விசாரணை முடிவில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றிக் கொண்ட பின்னரே, ஹெச்.ஐ.வி தொற்று ஏற்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மாங்காட்டில் பிரசவ சிகிச்சைக்காக முதலில் அனுமதிக்கப்பட்ட போதே ஹெச்ஐவி பரிசோதனையை மேற்கொள்ள அவருக்கு செவிலியர் அறிவுறுத்திய நிலையில், தான் தனியார் மருத்துவமனையில் ஏற்கனவே ஹெச்ஐவி பரிசோதனை செய்து விட்டதாக கூறி, பரிசோதனை மேற்கொள்ள மறுத்து விட்டதாகவும் குறிப்பிட்டார்.
பரிசோதனை செய்ய வேண்டிய இடங்களில் பரிசோதனையை மேற்கொள்ளாமல் புறக்கணித்து விட்டு பின்னர் நோய்த் தொற்று இருப்பதை கண்டறிந்து கூறிய மருத்துவமனை மீது குற்றம் சாட்டுவது அர்த்தமற்றது. அதே நேரத்தில்,அப்பெண்ணுக்கு ஹெச்ஐவி நோய் தொற்று இருப்பது கண்டறிந்த உடன், சம்பந்தப்பட்ட தாய், குழந்தை இருவருக்கும் உரிய சிகிச்சைகள் அளித்ததோடு, குழந்தைக்கு ஹெச்ஐவி நோய் தொற்று ஏற்படாமல் காப்பாற்றி உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட பெண்ணின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு தாம்பரம் காசநோய் மருத்துவமனையில் அவருக்கு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் ஏற்பாட்டில், பணி வழங்கி உள்ளதாகவும் அவர் கடந்த மார்ச் மாதம் முதல் அங்கு பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி,பாதிக்கப்பட்டதாக கூறும் பெண்ணின் குற்றச்சாட்டுகளில் போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.