சென்னை: நேஷனல் ஹெரால்டு வழக்கில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை, மூன்றாவது நாளாக அமலாக்கத்துறை நடத்தும் விசாரணையைக் கண்டித்தும், தலைநகர் டில்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலக முகப்பில் ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்தும், சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி சிலை அருகில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், இன்று (ஜூன் 16) ஆளுநர் மாளிகை முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய கே.எஸ்.அழகிரி, "கடந்த மூன்று நாட்களாக ராகுல் காந்தி மீது நடைபெறும் அடக்குமுறையைக் கண்டித்து நாம் போராடி வருகிறோம். நாளை (ஜூன் 17) அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். வன்முறை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆளுநர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் ஆளுநர் பதவி மீது நம்பிக்கை உள்ளது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது. இந்த பத்திரிகை காங்கிரஸ் கட்சியின் சொத்து. அனைத்தும் சட்டப்பூர்வமாக தான் நடைபெற்றது. இன்றைக்கும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை காங்கிரஸிடம் தான் இருக்கிறது. அதை நாங்கள் ஆர்எஸ்எஸ் இடமோ, அல்லது மோடியிடமோ எப்படி கொடுக்க முடியும்?
அறக்கட்டளை விதிகள்படியே நேசனல் ஹெரால்ட் பங்குகளை கட்சிப் பெயரில் இல்லாமல் , கட்சியினர் பெயரில் வைத்துள்ளோம். இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. காங்கிரஸ் நாத்திக கட்சியோ , இந்து மத எதிர்ப்பு கட்சியோ அல்ல . சாதி மத வேறுபாடுகளை எதிர்க்கும் கட்சி. இந்திய எல்லைக்குள் வாழும் அனைவரும் இந்தியரே என்றார் காந்தி.