சென்னை:மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று (டிச.15) அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "தமிழ்நாட்டில் இன்னும் டெல்டா வகை மாறுபாடுகள் பரவலாக கண்டறியப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளில் புதிதாக உருமாறிய கரோனா தொற்று ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது.
மூன்று நாட்களுக்கு முன் நைஜீரியாவில் இருந்து சென்னை திரும்பியவர் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட ஏழு பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், ஒமைக்ரான் முதற்கட்ட பரிசோதனையான டேக் பாத் சோதனையில் எஸ்-வகை (S வகை) மரபணு மாற்றம் கண்டறியப்பட்டு அவர்களது மாதிரிகள் சந்தேகத்திற்குரிய மாதிரிகளாகப் பதிவு செய்யப்பட்டு பெங்களூரு மரபணு பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தயார் நிலையில் படுக்கைகள்
இந்நிலையில் அனைத்து மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் தடுப்பூசி செலுத்தத் தவறிய மற்றும் குறித்த காலத்திற்குள்ளாக இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசி செயல்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும். மருத்துவமனையில் படுக்கைகள், ஆக்ஸிஜன் படுக்கைகள், தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள், மருந்துகள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.